விராட் கோலியை ஓரங்கட்ட முடிவு?: பிசிசிஐ வகுக்கும் திட்டம், இளம் வீரர்களுக்கு வாய்ப்பு

OruvanOruvan

இந்த ஆண்டு இடம்பெறவுள்ள டி20 உலகக் கிண்ண தொடரில் இருந்து இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் விராட் கோலியை ஓரங்கட்டுவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிப்பட்ட காரணங்களுக்காக இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்துப் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து விராட் கோலி விலகியிருந்தார்.

இந்நிலையில், அடுத்த சில நாட்களில் ஆரம்பமாகவுள்ள ஐ.பி.எல் தொடரில் பெங்களூர் அணிக்கு விளையாடுவதற்கு அவர் தயாராகியுள்ளார்.

அடுத்து இடம்பெறவுள்ள டி20 உலகக் கிண்ண தொடரில் ரோகித் ஷர்மா விளையாடுவது உறுதியாகியுள்ள நிலையில், விராட் கோலி பவர் ஹிட்டர்களுக்கு இடம்கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

கோலியின் விளையாட்டு பாணிக்கு பொருந்தாது

இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் போது, பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, அடுத்து நடைபெறவுள்ள டி20 உலகக் கிண்ண தொடரில் இந்தியாவை ரோஹித் ஷர்மா வழிநடத்துவார் என்பதை உறுதிப்படுத்தினார்.

எனினும் கோலி விளையாடுவது குறித்து அவர் எதனையும் கூறவில்லை.

14 மாத இடைவெளிக்கு பின்னர் இந்த ஆண்டு ஆரம்பத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 போட்டியில் ஷர்மா மற்றும் கோலி விளையாடியிருந்தனர்.

இந்நிலையில், அஜித் அகர்கர் தலைமையிலான பிசிசிஐ தேர்வுக் குழு கோலியை தவிர்த்து ரிங்கு சிங், ஷிவம் துபே, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஜிதேஷ் ஷர்மா போன்றவர்களுக்கு வாய்ப்பளிப்பதது முடிவு செய்துள்ளதாக அறியமுடிகின்றது.

மேற்கிந்தியத் தீவுகளின் மெதுவான ஆடுகளங்கள் விராட் கோலியின் விளையாட்டு பாணிக்கு பொருந்தாது என்றும் தேர்வு குழு கருதுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விராட் கோலியுடன் விரைவில் கலந்துரையாட தேர்வு குழு தீர்மானித்திருப்பதாக இந்திய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

விராட் கோலி இன்றி முழுமையடையாது

இதனிடையே, இந்திய அணியின் முன்னாள் வீரர் ர்பான் பதான், கோலி இல்லாமல் எந்த இந்திய அணியும் முழுமையடையாது என்று தெரிவித்துள்ளார்.

"விராட் கோலி இல்லாமல் எந்த இந்திய அணியும் முழுமையாடையாது. டி20 உலகக் கிண்ண தொடரில் இந்திய அணியில் விராட் கோலி இடம் பெறக் கூடாது என்று எப்படிச் சொல்ல முடியும்?

இந்தியாவுக்காக அவர் எந்த அழுத்தத்தை அளித்தாலும், சிறப்பாக செயல்பட்டார் என்பதை கடந்த காலங்களில் பார்த்திருக்க முடியும்" என்று பதான் கூறினார்.

டி20 உலகக் கிண்ண தொடரில் விளையாடும் இந்திய அணி மே மாதம் அறிவிக்கப்படும். இந்நிலையில், ஐபிஎல் தொடரில் விராட் கோலி எவ்வாறு செயல்படுகிறார் என்பதுதான் அனைவரின் பார்வையும்.