யாழ்ப்பாண இளைஞருக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வாய்ப்பு: தோனிக்கு கடைசி தொடர், பெங்களூருடன் முதல் போட்டி

OruvanOruvan

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் யாழ்ப்பாண இளைஞர் ஒருவர் வலைப்பந்துவீச்சாளராக ஒப்பந்தம் செய்யப்படவுள்ளார்.

இலங்கையின் தேசிய கிரிக்கெட் வீரர்களின் முகவராகச் செயற்படும் அமில கலுகலகே தனது சமூக ஊடகப் பதிவில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

எனினும் அந்த வீரர் யார் என்ற விபரங்கள் வெளியாகவில்லை. அடுத்த மாதம் 19ஆம் திகதி அவர் சென்னை அணியின் முகாமில் வலைப்பந்து வீச்சாளராக 17 வயதான இளைஞர் இணைந்துகொள்வார் என அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இலங்கை அணியின் மஹீஷ் தீக்ஷன மற்றும் மதீஷ பத்திரண போன்றோரும் சென்னை அணியின் வலைப்பந்துவீச்சாளர்களாக செயற்பட்ட நிலையில் இப்போது அவர்கள் அந்த அணியின் நட்சத்திர வீரர்களாக மாறியுள்ளனர்.

இந்நிலையிலேயே யாழ்ப்பாணத்தை சேர்ந்த வீரருக்கு வலைப்பந்துவீச்சாளர்களாக வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ஐபிஎல் தொடரின் 17வது பதிப்பு அடுத்த மாதம் 22ஆம் திகதி ஆரம்பமாகி மே மாதம் 26 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இம்முறையும் 10 அணிகள் போட்டியிடவுள்ளன. வீரர்களுக்கான ஏலம் கடந்த ஆண்டு இறுதிப் பகுதியில் (டிசம்பர் 19ஆம் திகதி ) டுபாயில் நடந்திருந்தது.

இந்நிலையில், போட்டி அட்டவனைகள் அண்மையில் வெளியிடப்பட்டிருந்தன. எதிர்வரும் 22ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள முதல் போட்டியில் சென்னை மற்றும் பெங்களூர் அணிகள் மோதவுள்ளன.

இந்தப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இடம்பெறவுள்ளது. சென்னை அணியின் தலைவராக தோனி செயற்படவுள்ளார். அவர் தலைமையில் சென்னை அணி ஐந்து முறை ஐபிஎல் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.

பெரும்பாலும் தோனிக்கு இது கடைசி ஐபிஎல் தொடராக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.