டிராவிட்டின் மிகப்பெரிய சாதனையை முறியடித்த ஜெய்ஸ்வால்: அடுத்த இலக்கு விராட் கோலி, 134 ஓட்டங்களால் இந்தியா பின்னிலை

OruvanOruvan

இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் தொடர் ஒன்றில் அதிக ஓட்டங்களை குவித்த இந்திய வீரர்களில் முன்னாள் ஜாம்பவான் ராகுல் டிராவிட்டின் சாதனையை யஷஸ்வி ஜெய்ஸ்வால் முறியடித்துள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் 73 ஓட்டங்களை குவித்ததன் மூலம் அவர் இந்தச் சாதனையை முறியடித்துள்ளார்.

முதல் இடத்தில் இருக்கும் விராட் கோலியின் சாதனையை முறியடிக்க அவருக்கு 37 ஓட்டங்கள் மாத்திரமே தேவைப்படுகின்றது.

அதனை அவர் இந்தப் போட்டியின் இரண்டாம் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடும் போது முறியடிக்க வாய்ப்பிருப்பதாக கிரிக்கெட் வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்தப் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி ஏழு விக்கெட்டுகளை இழந்து 219 ஓட்டங்களை குவித்துள்ளதுடன், 134 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது.

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடி சகல விக்கெட்டுகளையும் இழந்து 353 ஓட்டங்களை குவித்திருந்தது.

ஜெய்ஸ்வால் இந்தத் தொடரின் நான்காவது அரைச் சதத்தை கடந்துள்ளார், இரண்டு இரட்டை சதங்களும் அடங்கும். அவர் 73 ஓட்டங்களை குவித்திருந்த போதிலும் ஏனைய வீரர்கள் எவரும் 40 ஓட்டங்களைக் கூட தாண்டவில்லை.

இந்தத் தொடரில் ஜெய்ஸ்வால் ஏழு இன்னிங்சில் 103 சராசரியுடன் 618 ஓட்டங்களை குவித்துள்ளார். இதன் மூலம் டிராவிட்டின் முக்கிய சாதனை ஒன்றையும் அவர் முறியடித்துள்ளார்.

ஜெய்ஸ்வால் இப்போது இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அதிக ஓட்டங்களை குவித்த இந்திய வீரர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

2002 தொடரில் ராகுல் டிராவிட் பெற்ற 602 ஓட்டங்கள் என்ற சாதனையை அவர் முறியடித்துள்ளார். 2016 ஆம் ஆண்டு நடந்த தொடரில் 655 ஓட்டங்களை குவித்த விராட் கோலி இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.