ஒருநாள் அரங்கில் வரலாறு படைத்த நிஸ்ஸங்க: சனத்தின் சாதனையும் முறியடிப்பு

OruvanOruvan

PATHUM NISSANKA BECOMES THE FIRST SRI LANKAN TO SCORE A DOUBLE HUNDRED IN ODI HISTORY

ஆப்கானிஸ்தானுடனான நேற்றைய ஒருநாள் போட்டியில் இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரர் பத்தும் நிஸ்ஸங்க இரட்டை சதம் விளாசி சாதனை படைத்தார்.

இதன்மூலம், ஆடவர் ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த முதல் இலங்கை வீரர் என்ற பெருமையை பத்தும் நிஸ்ஸங்க பெற்றார்.

மேலும் நேற்றைய ஆட்டத்தில் அவர் பெற்றுக் கொண்ட 210 ஓட்டங்கள் ஒரு நாள் போட்டிகளில் இலங்கை அணிக்கான அதிகபட்ச தனிநபர் ஓட்டமாகும்.

இதனால் இலங்கையின் முன்னாள் அதிரடி துடுப்பாட்ட வீரர் சனத் ஜெயசூர்யாவின் 24 ஆண்டுகால சாதனை முறியடிக்கப்பட்டது.

2000 ஆம் ஆண்டு ஷார்ஜாவில் இந்தியாவுக்கு எதிராக ஜெயசூர்யா 189 ஓட்டங்களை எடுத்திருந்தார்.

கண்டி, பல்லேகலயில் நேற்று ஆரம்பமான முதல் ஒருநாள் போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணித் தலைவர் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி முதலில் துடுப்பெடுத்துமாறும் இலங்கையை பணித்தார்.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை அணி முதல் விக்கெட்டுக்காக 182 ஓட்டங்களை சேர்த்தது.

27 ஆவது ஓவரில் அவிஷ்க பெர்னாண்டோ ஆட்டமிழந்த நிலையில், மனம் தளராமல் தொடர்ந்தும் துடுப்பெடுத்தாடிய பத்தும் நிஸ்ஸங்க 32 ஆவது ஓவரில் 88 பந்துகளை எதிர்கொண்டு சர்வதேச அரங்கில் தனது நான்காவது சதத்தை பெற்றார்.

இறுதி 18 ஓவர்களில் பத்தும் நிஸ்ஸங்க மேலதிகமாக 110 ஓட்டங்களை குவித்தார்.

இறுதிவரை ஆட்மிழக்காதிருந்த அவர் 139 பந்துகளில் 20 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள் அடங்கலாக 210 ஓட்டங்களை ஆட்டமிழக்காது பெற்றார்.

அவரது வலுவான துடுப்பாட்டத்தால் இலங்கை 50 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட் இழப்புக்கு 381 ஓட்டங்களை எட்டியது.

பத்தும் நிஸ்ஸங்கவின் 210 ஓட்டம் என்பது ஒருநாள் போட்டிகளில் தனிநபர் ஒருவர் பெற்றுக் கொண்ட ஐந்தாவது அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கை ஆகும்.

அதேநேரம் ஒருநாள் அரங்கில் பதிவான 12 ஆவது இரட்டை சதம் இதுவாகும்.

42 ஓட்டங்களால் இலங்கை வெற்றி பெற்றது.

382 என்ற வெற்றி இலக்கினை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான், 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்புக்கு 339 ஓட்டங்களை பெற்றது.

இதன் மூலம் இலங்கை 42 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.

துடுப்பாட்டத்தில் ஆப்கானிஸ்தான் 55 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்தாலும், ஆறாவது விக்கெட்டுக்காக கைகோர்த்த அஸ்மத்துல்லா உமர்சாய் - மொஹமட் நபி ஆகியோர் நல்லதொரு துடுப்பாட்டத்தை அணிக்காக பெற்றுக் கொடுத்தனர்.

அஸ்மத்துல்லா உமர்சாய் 115 பந்துகளில் 149 ஓட்டங்களையும், மொஹமட் நபி 130 பந்துகளில் 136 ஓட்டங்களையும் எடுத்தனர்.

இந்த வெற்றியின் மூலம் இங்கை மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1:0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

OruvanOruvan

Pathum Nissanka joins the game's elites with the innings of a lifetime