டெஸ்ட் பந்து வீச்சாளர் தரவரிசையில் பும்ரா முதலிடம்: பிரபாத், அஷித பாரிய முன்னேற்றம்
ஐசிசி ஆடவர் டெஸ்ட் பந்து வீச்சாளர்களுக்கான அண்மைய தரவரிசையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா (Jasprit Bumrah) முதலிடத்தை பிடித்துள்ளார்.
இதன் மூலம் உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக பும்ராவின் இடம் மீண்டும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
91 ஓட்டங்களுக்கு ஒன்பது விக்கெட்டுகள்
விசாகப்பட்டினத்தில் இங்கிலாந்துடன் நடந்து முடிந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 106 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் பும்ரா இரு இன்னிங்ஸுகளிலும் மொத்மாக 91 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து ஒன்பது விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.
இந்த அபாரமான பந்து வீச்சு மூலம் பும்ரா அண்மைய ஐசிசி ஆடவர் டெஸ்ட் பந்து வீச்சாளர் தரவரிசையில் ஒட்டுமொத்தமாக மூன்று இடங்கள் முன்னேறி முதலிடத்துக்கு வந்தார்.
அதுமட்டுமின்றி, டெஸ்ட் கிரிக்கெட்டில் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலில், முதலிடம் பிடித்த முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையையும் பும்ரா பெற்றார்.
இங்கிலாந்துடனான இரண்டாவது போட்டியின் ஆட்டநாயகனாகவும் அவர் தெரிவானார்.
மூன்றாம் இடத்துக்கு சென்ற ரவிச்சந்திரன் அஷ்வின்
ஐசிசி ஆடவர் டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் இதுவரை முதலிடத்தில் இருந்து வந்த ரவீச்சந்திரன் அஷ்வின் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டார்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல், குறித்த தரவரிசையில் அஷ்வின் தொடர்ந்து முதலிடம் வகித்து வந்தார்.
இந்நிலையில், இங்கிலாந்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், வெறும் 3 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்த அவர் தரவரிசைப் பட்டியலில் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
தென்னாப்ரிக்காவின் ககிசோ ரபாடா இரண்டாவது இடத்துக்கு முன்னேறினார்.
ஆறாவது இடத்துக்கு முன்னேறிய பிரபாத் ஜயசூரிய
இலங்கை சுழற்பந்து வீச்சாளர் பிரபாத் ஜயசூரிய ஐசிசி ஆடவர் டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் மூன்று இடங்கள் முன்னேறி ஆறாம் இடத்தை பிடித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியதைத் தொடர்ந்து அவர் இந்த நிலையினை எட்டினார்.
ஆப்கானிஸ்தானுடான போட்டியில் அவர் ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.
பிரபாத் ஜயசூர்ய 10 டெஸ்ட் போட்டிகளில் 67 விக்கெட்டுகளை வீழ்த்தி, அதிவேகமாக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
அஷித பெர்னாண்டோ 7 இடங்கள் முன்னேற்றம்
ஆப்கானிஸ்தானுடனான அதே போட்டியில் அஷித பெர்னாண்டோ மொத்தம் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன் மூலம் அவர் ஜயசூரிய ஐசிசி ஆடவர் டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் 7 இடங்கள் முன்னேறி 34 ஆவது இடத்துக்கு வந்துள்ளார்.