மார்ச்சில் இலங்கை பங்களாதேஷுக்கு சுற்றுப் பயணம்: ஐ.பி.எல். ஆட்டத்தை தவறவிடும் வீரர்கள்

OruvanOruvan

SriLanka team

பங்களாதேஷுக்கான இலங்கை கிரிக்கெட் அணியின் சுற்றுப் பயணம் தொடர்பான விபரத்தினை சர்வதேச கிரிக்கெட் நிர்வாகம் நேற்று வெளியிட்டது.

அதன்படி, மார்ச் மாதம் பங்களாதேஷ் செல்லும் இலங்கை அணி வங்கப்புலிகளுடன் இரண்டு டெஸ்ட், மூன்று டி:20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் மோதும்.

இந்தப் போட்டிகளானது ஏப்ரல் மாதத்தின் ஆரம்பப் பகுதி வரை இடம்பெறவுள்ளதால் இந்தியன் பிரீமியர் லீக்கின் ஆரம்ப போட்டிகளில் இலங்கை - பங்களாதேஷ் சுற்றுப் பயணத்தில் பங்கெடுக்கும் வீரர்கள் கலந்து கொள்வதில் சிக்கல் ஏற்படும்.

சில்ஹெட்டில் 3 போட்டிகள் கொண்ட டி:20 தொடர்

இரு அணிகளும் முதலில் சில்ஹெட்டில் மூன்று போட்டிகள் கொண்ட டி:20 தொடரில் விளையாடும்.

அதைத் தொடர்ந்து ஒருநாள் தொடரிலும், பின்னர் 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் கீழ் தங்கள் தரவரிசையை முன்னேற்றுவதற்கான இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதும்.

முதல் டெஸ்ட் மார்ச் 22 முதல் 26 வரை சில்ஹெட்டிலும், இரண்டாவது டெஸ்ட் மார்ச் 30 முதல் ஏப்ரல் 3 வரை சட்டோகிராமிலும் நடைபெறும்.

WTC 2023-25 - இலங்கை 8 ஆம் இடம், பங்களாதேஷ் 4 ஆம் இடம்

2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் சுழற்சியில் இரு அணிகளின் நிலையைப் பற்றி பேசுகையில், பங்களாதேஷ் நான்காவது இடத்தில் உள்ளது. அதேநேரம் இலங்கை ஒன்பதாவது இடத்தில் உள்ளது.

2024 ஐ.பி.எல். போட்டிகளை தவறவிடும் வீரர்கள்

2024 இந்தியன் பிரீமியர் (IPL) லீக் ஆரம்பிக்கும் காலக்கட்டத்துடன், பங்களாதேஷுக்கன இலங்கையின் சுற்றுப் பயணம் நிறைவுக்கு வரும்.

2024 ஐ.பி.எல். போட்டிகளுக்கான திகதிகள் இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை. எனினும், எதிர்வரும் மார்ச் இறுதி வாரத்தில் போட்டிகள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

இரு நாடுகளிலிருந்தும் சில வீரர்கள் ஐ.பி.எல். போட்டிகளின் ஒரு பகுதியாக உள்ளனர், மேலும் அவர்கள் டெஸ்ட் அணியில் இடம் பெறுவார்களா என்பதை அவதானிக்க வேண்டும்.

சுற்றுப் பயணத்தில் டி:20 மற்றும் ஒருநாள் போட்டிகள் மார்ச் 18 அன்று முடிவடையும். அதனால் சுற்றுப் பயணத்தில் விளையாடும் வீரர்கள், ஐ.பி.எல். அணிகளில் உரிய நேரத்தில் இணைந்து கொள்ள வழி ஏற்படும்.

எனினும் டெஸ்ட் அணியில் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால், ஐ.பி.எல். போட்டிகளில் வீரர்கள் உரிய நேரத்தில் தங்கள் அணியில் இணைந்து கொள்ள முடியாது போகலாம்.

மேலும் அவர்கள் ஐ.பி.எல். தொடரின் ஆரம்பப் போட்டிகளையும் தவறவிடும் இக்கட்டான நிலைக்கும் தள்ளப்படுவார்கள்.

போட்டி அட்டவணை

  • முதல் டி:20 - மார்ச் 4

  • இரண்டாவது டி:20 - மார்ச் 6

  • மூன்றாவது டி:20 - மார்ச் 9

  • முதல் ஒருநாள்- மார்ச் 13

  • இரண்டாவது ஒருநாள் - மார்ச் 15

  • மூன்றாவது ஒருநாள் - மார்ச் 18

  • முதல் டெஸ்ட் - மார்ச் 22 - 26

  • இரண்டாவது டெஸ்ட் - மார்ச் 30 - ஏப்ரல் 3