எஃப்ஏ கிண்ணம்: கடைசி நேரத்தில் ஸ்பர்சின் கனவைக் கலைத்த மேன்சிட்டி

OruvanOruvan

ஆட்டம் முடியும் தறுவாயில் நேதன் அக்கே அடித்த ஒற்றை கோலால் எஃப்ஏ கிண்ணக் கால்பந்தின் நான்காம் சுற்று ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி குழு 1-0 என்ற கணக்கில் டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் குழுவைத் தோற்கடித்தது.

ஸ்பர்ஸ் குழுவின் புதிய அரங்கில் சிட்டி குழுவிற்குக் கிடைத்த முதல் வெற்றி இது. கடந்த 2019ஆம் ஆண்டு திறக்கப்பட்ட அவ்வரங்கில் சிட்டி குழு இதற்குமுன் விளையாடிய ஐந்து ஆட்டங்களிலும் தோல்வியைத் தழுவி இருந்தது.

ஆட்டத்தின் 88ஆம் நிமிடத்தில் கோலடித்து, அரங்கில் திரண்டிருந்த ஸ்பர்ஸ் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார் அக்கே.

“இந்த ஆட்டத்தில் எங்களது ஆட்டம் நம்பமுடியாத வகையில் சிறப்பாக இருந்தது. ஆட்டத்தின் முதல் நிமிடத்திலிருந்து இறுதி வரையிலும் எல்லாமே சிறப்பாக அமைந்தது,” என்று சொன்னார் சிட்டி குழுவின் நிர்வாகி பெப் கார்டியோலா.

கிறிஸ்துமசுக்கு முன்னால் சற்று தடுமாற்றம் கண்ட சிட்டி குழு அதன்பின் எழுச்சி கண்டுள்ளது. அக்குழு கடைசியாக விளையாடிய ஏழு ஆட்டங்களிலும் வெற்றியைச் சுவைத்துள்ளது. கடந்த பருவத்தில் பிரிமியர் லீக், சாம்பியன்ஸ் லீக், எஃப்ஏ கிண்ணம் என மூன்று பட்டங்களைக் கைப்பற்றியது சிட்டி.

செல்சி - ஆஸ்டன் வில்லா குழுக்கள் மோதிய இன்னோர் ஆட்டம் 0-0 எனச் சமநிலையில் முடிந்தது.

இரு குழுக்களுக்கும் பல கோல் வாய்ப்புகள் கிடைத்தும் ஒருமுறைகூட பந்து வலைக்குள் புகவில்லை. வில்லா கோல் காப்பாளர் எமிலியானோ மார்ட்டினஸ், செல்சி குழுவின் கோல் முயற்சிகளை ஒன்பது முறை முறியடித்தார்.

இதனால், அக்குழுக்கள் மீண்டும் மோத வேண்டியுள்ளது. நாட்டிங்ஹம் ஃபாரஸ்ட், பிரிஸ்டல் சிட்டி குழுக்கள் மோதிய நான்காம் சுற்று ஆட்டமும் கோல் ஏதுமின்றி, சமநிலை கண்டது.