சனத் ஜயசூரிய போட்டிகளில் மோசடியில் ஈடுபட்டார்: ஐசிசி தம்மிடம் கூறியதாக ரொஷான் தெரிவிப்பு

OruvanOruvan

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜயசூரிய கிரிக்கெட் போட்டிகளில் மோசடி செய்ததாக சில குற்றச்சாட்டுகள் கிடைக்கப்பெற்றதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை தம்மிடம் கூறியதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என்ற தொனிப்பொருளின் கீழ் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு சுட்டிக்காட்டினார்.

நான் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த காலத்தில் இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தை இடைநிறுத்தி இடைக்கால குழுவொன்றை நியமித்ததன் பின்னர் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் பிரதிநிதிகள் என்னை தொடர்புக்கொண்ட போதே இதனை கூறியதாகவும் ரொஷான் ரணசிங்க கூறியுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்துடன் சனத் ஜயசூரிய எந்த நிபந்தனையின் கீழும் தொடர்பு கொள்ளக் கூடாது என சர்வதேச கிரிக்கெட் பேரவை தம்மிடம் தெரிவித்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால், இன்று சனத் ஜயசூரிய இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழுவின் தலைமை ஆலோசகராகப் பணிபுரிகிறார். ​​சர்வதேச கிரிக்கெட் பேரவை இதற்கு எந்த ஆட்சேபனையும் தெரிவிக்காதது ஒருவித கபட நாடகத்தையே வெளிப்படுத்துகிறது.