பாண்டியா எப்படி அணி மாற்றப்பட்டார்? திரைமறைவில் நடந்தது என்ன?: ஒரு ஐபிஎல் அணியிலிருந்து மற்றொரு ஐபிஎல் அணிக்கு வீரர்கள் மாறலாம். இது முற்றிலும் பணப் பரிமாற்றம் மூலம் நிகழலாம்.

OruvanOruvan

ஒரு ஐபிஎல் அணியிலிருந்து மற்றொரு ஐபிஎல் அணிக்கு வீரர்கள் மாறலாம். இது முற்றிலும் பணப் பரிமாற்றம் மூலம் நிகழலாம். அல்லது ஒரு வீரருக்குப் பதில் மற்றொரு வீரரை மாற்றிக்கொள்ளலாம்.

உதாரணத்துக்கு, லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் வேகப்பந்துவீச்சாளர் அவேஷ் கான் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு மாறியுள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸிலிருந்து தேவ்தத் படிக்கல் லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸுக்கு மாறியுள்ளார். இது ஒரு வீரருக்குப் பதில் மற்றொரு வீரர் என்கிற வகையிலான அணி மாற்றம்.

ஹார்திக் பாண்டியா குஜராத் டைடன்ஸிலிருந்து மும்பை இந்தியன்ஸுக்கு மாறியுள்ளார். இது முற்றிலும் பணப் பரிமாற்றம் மூலம் நிகழ்ந்த அணி மாற்றம்.

பணப் பரிமாற்றம் மூலம் அணி மாற்றம் என்றால் வீரருக்கான தொகை எப்படி நிர்ணயம் செய்யப்படும்?

ஒரு வீரர் பணம் மூலம் அணி மாற்றம் செய்யப்படுகிறார் என்றால், ஏலத்தில் எந்தத் தொகைக்கு அவர் தேர்வு செய்யப்பட்டாரோ அதே தொகை செலுத்தப்பட வேண்டும்.

ஹார்திக் பாண்டியா உதாரணத்தை எடுத்துக்கொண்டால், 2022இல் குஜராத் டைடன்ஸ் அணி அவரை எந்தத் தொகைக்கு ஒப்பந்தம் செய்ததோ, அதே தொகையை மும்பை இந்தியன்ஸ் அணி குஜராத் டைடன்ஸுக்கு அளிக்க வேண்டும்.

அணி மாற்றம் எப்போது நிகழலாம்?

ஐபிஎல் விதிகளின்படி ஐபிஎல் பருவம் முடிவடைந்து ஒரு மாதத்துக்குப் பிறகு அணி மாற்றம் நடைபெறலாம். ஏலம் நடைபெறும்போது அதற்கு ஒரு வாரத்துக்கு முன்பு வரை வீரர்களை அணி மாற்றம் செய்துகொள்ளலாம். ஏலம் முடிந்த பிறகு அடுத்த பருவம் தொடங்குவதற்கு ஒரு மாதம் வரை மீண்டும் அணி மாற்றம் நடைபெறுவதற்கு அனுமதி உண்டு.

டிசம்பர் 19ஆம் திகதி ஐபிஎல் ஏலம் நடைபெறுகிறது. எனவே, டிசம்பர் 12ஆம் திகதி வரை ஐபிஎல் அணிகள், வீரர்களை அணி மாற்றம் செய்துகொள்ளலாம். ஏலம் முடிந்தபிறகு டிசம்பர் 20 முதல் 2024 ஐபிஎல் தொடங்குவதற்கு ஒரு மாதத்துக்கு முன்பு வரை மீண்டும் அணி மாற்றத்தை நடத்திக்கொள்ளலாம்.

ஐபிஎல் போட்டியில், வீரர்கள் அணி மாற்றம் எப்போதிலிருந்து நடைமுறையில் உள்ளது?

வீரர்கள் அணி மாற்றம் என்பது 2009 முதல் நடைமுறையில் உள்ளது. 2009இல் மும்பை இந்தியன்ஸ் அணி ஆஷிஸ் நெஹ்ராவுக்குப் பதில் ஷிகர் தவனை டில்லி டேர்டெவில்ஸிடமிருந்து (தற்போது டில்லி கேபிடல்ஸ்) வாங்கியது.

அணி மாற்றம் செய்யப்படும்போது வீரர்களின் சம்மதம் கேட்கப்படுமா?

அணி மாற்றம் செய்யப்படுவதற்கு முன்பு, சம்பந்தப்பட்ட வீரரின் ஒப்புதல் கட்டாயம்.

ஹார்திக் பாண்டியா உதாரணத்தில் 2023 ஐபிஎல் நிறைவடைந்தவுடனே மும்பை இந்தியன்ஸ் அணி குஜராத் டைடன்ஸிடம் பேச்சுவார்த்தையைத் தொடங்கிவிட்டது.

பணிப் பரிமாற்றம் மூலம் செய்துகொள்வதா அல்லது வீரர்களை மாற்றிக்கொள்வது மூலம் பாண்டியாவை எடுப்பதா என்கிற பேச்சுவார்த்தையே மும்பை தொடங்கியிருக்கிறது.

மும்பைக்குச் செல்ல ஹார்திக் பாண்டியா விருப்பம் காட்டியதாக குஜராத் டைடன்ஸ் இயக்குநர் விக்ரம் சோலங்கி தெரிவித்தார். எனவே, மும்பை இந்தியன்ஸ் ரூ. 15 கோடி கொடுத்து ஹார்திக் பாண்டியாவை வாங்கியுள்ளது.

அப்படியென்றால் மற்றொரு ஐபிஎல் நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தியதற்காக 2010இல் ரவீந்திரா ஜடேஜாவுக்குத் தடை விதிக்கப்பட்டது ஏன்?

2010இல், ரவீந்திரா ஜடேஜா ஓர் ஆண்டு ஐபிஎல்லில் விளையாடத் தடை விதிக்கப்பட்டது. ராஜஸ்தான் ராயல்ஸின் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் மும்பை இந்தியன்ஸிடம் புதிய ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கான முயற்சியில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அணி மாற்றம் மற்றும் செயல்முறைக்கான விதிகளை ஜடேஜா மீறியதாக ஐபிஎல் நிர்வாகம் அப்போது தெரிவித்தது.

ஒரு வீரருக்கு அணி மாற விருப்பம் இருக்கிறது. ஆனால், அவர் சார்ந்திருக்கும் அணி நிர்வாகம் அவர் அணி மாற அனுமதிக்கவில்லை. அப்போது என்ன நடக்கும்?

இது மாதிரியான சூழலில் அணி நிர்வாகத்துக்கே இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் உள்ளது.

அணி மாற்றத்துக்கான கட்டணம் என்ன? இதைத் தீர்மானிப்பது யார்? இதற்கான வரையறை என்ன?

அணி மாற்றத்துக்கான கட்டணம் என்பது தனி. வீரர்களுக்கென்று நிர்ணயிக்கப்பட்டுள்ள தொகையைத் தாண்டி தனியாக ஒரு கட்டணத்தை சம்பந்தப்பட்ட அணிக்கு வீரரை விலைக்கு வாங்கும் அணி செலுத்தியாக வேண்டும்.

மீண்டும் ஹார்திக் பாண்டியா உதாரணத்தை எடுத்துக்கொள்வோம். இதில் மும்பை இந்தியன்ஸ் அணி குஜராத் டைடன்ஸுக்கு ஒரு கட்டணத்தைச் செலுத்தியிருக்கும். இதைப் பொதுவெளியில் வெளியிட வேண்டியதில்லை. ஏலத்துக்கான தொகையிலும் இது எவ்விதத் தாக்கத்தையும் உண்டாக்காது. அணி மாற்றத்துக்கான பணிகள் நிறைவடைவதற்கு முன்பு பரஸ்பரம் இரு அணிகளும் ஒப்புக்கொள்வதற்கு இணங்க ஒரு தொகை கட்டணமாக செலுத்தப்படும். இதற்கு வரையறை எதுவும் கிடையாது. சம்பந்தப்பட்ட ஐபிஎல் அணி நிர்வாகங்கள் மற்றும் ஐபிஎல் நிர்வாகத்துக்கு மட்டுமே இந்தக் கட்டணம் குறித்து தெரியும்.

அணி மாற்றத்துக்கான கட்டணத்தில் வீரருக்கு ஏதேனும் பங்கு இருக்கிறதா?

ஒப்பந்தத்தின்படி, அணி மாற்றத்துக்கான கட்டணத்தில் 50 சதவிகித தொகை வீரருக்கு அளிக்கப்பட வேண்டும். எனினும், இது சம்பந்தப்பட்ட வீரர் மற்றும் அவரைக் கொடுப்பதற்கு முனையும் அணி நிர்வாகத்துக்கு இடையிலான ஒப்பந்தத்தைப் பொறுத்து மாறும். எனவே, அணி மாற்றத்துக்கான கட்டணத்தில் வீரருக்கும் ஒரு பங்கு இருக்கிறது என்பதை உறுதிபடக் கூற முடியாது.

ஏலத்துக்கென்று வகுக்கப்பட்டுள்ள தொகையில் இவை மாற்றத்தை உண்டாக்குமா?

இல்லை. ஹார்திக் பாண்டியா உதாரணத்தை எடுத்துக்கொண்டால் மும்பை இந்தியன்ஸ் அணியிடமிருந்த தொகையிலிருந்து ரூ. 15 கோடி (பாண்டியாவின் தொகை) கழியும். குஜராத் டைடன்ஸுக்கான ஏலத் தொகையில் ரூ. 15 கோடி கூடும். அணி மாற்றத்துக்கான கட்டணம் என்பது ஏற்கெனவே தெரிவித்தபடி இதில் சேராது.

அதாவது, பண பலம் படைத்துள்ள ஐபிஎல் அணியால், அணி மாற்றத்துக்கான கட்டணமாக பெரிய தொகையை செலுத்தி மற்ற அணியிலுள்ள வீரர்களை வாங்க முடியும். அப்படியென்றால், ஐபிஎல் ஏலத்துக்கென்று வரையறுக்கப்பட்டுள்ள தொகையிலிருந்து மாறுபடுகிறது. இது சமநிலையை சீர்குலைக்காதா?

நிச்சயமாக சமநிலையை சீர்குலைப்பதாகப் பார்க்கலாம். ஐபிஎல் ஏலத்துக்கென்று நிர்ணயிக்கப்பட்டுள்ள தொகையைக் காட்டிலும் கூடுதல் தொகையை அணி மாற்றத்துக்கான கட்டணமாக செலவிட ஐபிஎல் அணிகளுக்கு அனுமதி உண்டு. இருந்தபோதிலும், சம்பந்தப்பட்ட வீரர் சார்ந்திருக்கும் அணியின் ஒப்புதல் இல்லாமல் அணி மாற்றம் நிகழாது.