வாகனங்களை விடுவிப்பதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட நபர் கைது: கைது செய்யப்பட சந்தேக நபர் மூன்று பேரிடமிருந்து 6.2 மில்லியன் ரூபாவை பெற்றுக்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இறக்குமதி செய்யப்பட்ட கார்கள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் ஊடாக விடுவிக்கப்படுமெனக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட நபரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த துறைமுகத்தின் ஊடாக மூன்று கார்கள் விடுவிக்கப்படுமென கூறியே இவ்வாறு மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
இதன்படி, கைது செய்யப்பட சந்தேக நபர் மூன்று பேரிடமிருந்து 6.2 மில்லியன் ரூபாவை பெற்றுக்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தலவத்துகொட பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு முதல் வாகனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் இறக்குமதிக்கு இலங்கை அரசாங்கம் தடை விதித்தது.
தொடர்ந்து படிப்படியாக சில பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்ற போதும் இதுவரை வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
வாகன இறக்குமதியின் போது ஆண்டுக்கு குறைந்தது இரண்டு பில்லியன் அமெரிக்க டொலர்கள் பரிமாற்றம் செய்யப்படுவதால், அது வெளிநாட்டு கையிருப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற அடிப்படையில் குறித்த அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.
வாகனங்களின் இறக்கமதி உடனடியாக அனுமதிக்கப்படாது எனவும் குறித்த தடையானது மேலும் ஒன்றரை ஆண்டுகளுக்கு நீடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
வாகன இறக்குமதியை நிறுத்தும் அரசாங்கத்தின் தீர்மானத்தால் 90 வீதத்திற்கும் அதிகமான கார் விநியோக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதுடன், 400,000 பேர் தொழிலை இறந்ததாகவும் லங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்திருந்தது.
இவ்வாறான நிலையில், அவ்வப்போது தடையை மீறி வாகனங்கள் இறக்குமதி செய்யப்படும் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பெரும்பாலான வாகனங்கள் ஜப்பான் மற்றும் பிரித்தானிய போன்ற நாடுகளின் உரிமம் வழங்கும் முறையின் கீழ் இறக்குமதி செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டது.
இந்த நிலையில், தடைக்குப் பின்னர் இறக்குமதி செய்யப்பட வாகனங்கள் அனைத்தும் சட்டத்திற்கு முரணானது என சுங்கத் திணைக்களம் தெரிவித்திருந்தது.