இமாலயப் பிரகடன எதிரொலியே ‘கனேடியத் தமிழர் கூட்டு’: திமிறி' எழ வைத்துள்ள ஒரு தூண்டுதல் முனை என்றும் விமர்சனம்

OruvanOruvan

கனேடியத் தமிழர் கூட்டு என்ற கரிசனையாளர் குழு ஏன் தோற்றம் பெற்றது என்பது தொடர்பாகக் கனடாவில் வாழும் சுயாதீன ஊடகவியலாளர் உதயன் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

CTC என்று அழைக்கப்படும் ‘கனேடியத் தமிழர் பேரவை’ சர்ச்சைக்குரிய இமாலயப் பிரகடன விவகாரத்தில் தன்னை ஈடுப்படுத்திய பின்னரான சூழலில் இப் புதிய கூட்டு உருவாக்கப்பட்டுள்ளது என்ற விளக்கத்தை உதயன் தனது முகநூலில் விபரிக்கிறார்.

அவர் பதிவிட்டுள்ள முழுமையான ஆக்கம் பின்வருமாறு,

கனேடியத் தமிழர் கூட்டு’ எனும் கரிசனையாளர் குழுவின் தோற்றமும், அதன் சுறுசுறுப்பும், கனேடியத் தமிழர்களின் கவனத்தை மட்டுமல்ல தமிழர் தாயகத்திலும், தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலும் உள்ள தமிழர்களின் கவனத்தையும் ஈர்த்துவருவதை கடந்த சில வாரங்களாக அவதானிக்க முடிகிறது.

கனேடியத் தமிழர்களின் குரலாக தன்னை அடையாளப்படுத்தும் ‘கனேடியத் தமிழர் பேரவை’ எனும் ‘CTC’ சர்ச்சைக்குரிய இமாலயப் பிரகடன விவகாரத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டமை மிகக் கடுமையான சமூக அதிர்வுகளை ஏற்படுத்தியதன் விளைவே, ‘கனேடியத் தமிழர் கூட்டு’ எனும் கரிசனையாளர் குழு செயலூக்கம் பெறுவதற்கு வித்திட்டுள்ளது.

உணர்வு மிக்க சிந்தனை

பொதுவில் தனிமனிதர்களாகவும், அமைப்புக்களாகவும், அடித்துக்கொள்ளுகின்ற ஒரு சமூகம், ஏதாவது ஒரு முனையில் தமிழர்களாக, இன உணர்வு மிக்கவர்களாக, ஆக்க சிந்தையுடன், ஒரு பொதுவான தளத்தில் ஒன்றிணைய மாட்டார்களாக எனும் சாமானியப் பொதுமக்களின் வேண்டுதல் ஓரளவு பலித்திருப்பதாக உணரமுடிகிறது.

குறைந்த பட்சம், கனடாவில் அவ்வாறான ஒரு கரிசனையாளர் குழு, கருத்துக்களால் வேறுபட்டாலும், தமிழர்களாக ஒன்றுபடுவோம் (Divided by Oinion but United as Tamils) என்ற சிந்தனை வடிவம் கருக்கொள்ள வழிகோலியுள்ளது.

CTC யின் இமாலயப் பிரகடன விவகாரம், உள்ளுக்குள் குமுறிக்கொண்டிருந்தவர்களை இனியும் பொறுக்க முடியாது என்று 'திமிறி' எழ வைத்துள்ள ஒரு தூண்டுதல் முனையாக (Triggering Point) அமைந்தபோதிலும், மிக மிகத் தாமதமாக நடந்த ஒன்று என்பதே சமூகத்தில் பலரதும் கருத்து.

கட்டமைப்பு அழுத்தங்கள் இல்லை

2009 க்குப் பிற்பட்ட காலத்தில் இருந்தே, 'கனேடியத் தமிழர் பேரவை'யின் வெளிப்படைத் தன்மையற்ற, பொறுப்புகூறலற்ற, தன்னிச்சையான செயற்பாடுகள் விமர்சனங்களை எதிர்கொண்டு வந்தபோதிலும், கட்டமைப்பு ரீதியாக அவ்வமைப்புக்கு குறிப்பிடத்தக்க அழுத்தங்களைக் கொடுக்கவல்ல ஆற்றல் அவ்வாறான விமர்சனப்பரப்புக்கு இருக்கவில்லை.

குறிப்பாக, ஒன்றிணைக்கப்படாத தனிமனிதர்களின் உள்ளக்குமுறலாகவும், தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சிகள் காரணமாகவும், அமைப்புக்கள் சார்ந்த போட்டி-பொறாமைகள் காரணமாகவும் அவ்வாறான விமர்சனங்கள் மற்றும் கண்டனங்கள் என்பவை, CTC யின் சட்டையில் பட்ட தூசுபோல பறந்துபோயின.

மேலும், போருக்குப் பின்னரான ஒரு சில வருடங்கள் வரை, ஈழத்தமிழர்களுக்கான நீதி, அரசியல் தீர்வு, போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணம் என்று பல்வேறு தளங்களில் CTC யின் பங்கு குறிப்பிடத்தக்க ஆக்கத்தை கொடுத்தது என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

2009 இற்குப் பின்னரான காலம்

குறிப்பாக, போர் இடம்பெற்ற காலத்தில் தமிழர்களுக்கான பரப்புரைத் தளம் (Lobbying Base) என்பது மிகவும் நலினப்பட்டே இருந்தது.

ஆனால், போருக்குப் பின்னரான காலப்பதியில், தமிழர்களுக்கான பரப்புரைத் தளம் வலுப்பெறுவதற்கு CTC யும் அதன் செயற்பாட்டாளர்களும் கணிசமான பங்கை ஆற்றியிருந்தனர்.

அதுபோலவே 2015 வரையில் உலகத்தமிழர் பேரவையினுடைய (GTF) பங்கும் காத்திரமானது.ஆயினும், 2015 ஆம் ஆண்டு, உலகத் தமிழர் பேரவை (GTF) அப்போதைய இலங்கை அமைச்சர் மங்கள சமரவீரவுடன் லண்டனில் நடத்திய பேச்சுவார்த்தைகளின் பின்னர், GTF இன் அங்கத்துவ அமைப்பாக விளங்கிய CTC யிலும் அதன் கொள்கை மற்றும் செயற்பாடுகளிலும் மாற்றங்கள் பிரதிபலிக்கப்பட்டன.

குறிப்பாக, தமிழினப்படுகொலைக்கு நீதி வேண்டும் செயற்பாடுகளில் அதன் தாக்கம் உணரப்பட்டது. இனப்படுகொலைக்கான நீதி வேண்டும் கோரிக்கைகளும், செயற்பாடுகளும் போர்க்குற்ற விசாரணை மற்றும் பொறுப்புக்கூறல் என்ற பதங்களுக்குள் சுருக்கப்பட்டன.

தமிழர்களுக்கான நீதி வேண்டிய தளத்தில் வீரியமாகச் செயற்பட்ட CTC, தமிழர் தாயகத்தில் தெரிவு செய்யப்பட்ட நிவாரண செயற்பாடுகளுக்குள் தன்னை மட்டுபடுத்திக்கொண்டது.

குறிப்பாக, பண்ணை மற்றும் நிவாரணப்பணிகளுக்கான நிதிசேர் நடைபவனி (Walkathon), நிதிசேர் இரவு விருந்து மற்றும் ஒன்றுகூடல், பொங்கல் விழா, வணிக வருவாய் மற்றும் அரச மானியத்துடன் கூடிய ‘தெருவிழா’, தமிழ்க் கதிரைக்கான நிதிசேர்ப்பு, G.U. போப்புக்கு சிலை மற்றும் அதற்கான நிதிசேரிப்பு, கனடாவிலும், தமிழர் தாயகத்திலுமான மருத்துவமனைகளுக்கான நிதிசேகரிப்பு என்று தனது செயற்பாட்டுத்தளத்தில் கவனம் செலுத்தியது.

விடுதலை உணர்வை மடைமாற்ற முடியாது

எனினும், கனேடியத் தமிழர்களின் குரலாக தம்மை அடையாளப்படுத்தும் CTC, அவர்களின் உணர்வுகளுக்கும் வலிகளுக்குமான மருந்தாக ஆக்கபூர்வமாக செயற்படவில்லை என்பது மட்டுமல்லாமல், வெளிப்படைத்தன்மையற்று, ஈழத்தமிழர்களுக்கான அரசியல் அபிலாஷைகளின் திசைவழிகளை மடைமாற்றும் ஒரு பரப்புரை அமைப்பாக தன்னை மாற்றிவிட்டது என்பதே சமூகத்தரப்பில் இருந்து வெளிப்பட்ட குற்றச்சாட்டு.

குறிப்பாக, வெளிநாட்டு முகவர் அமைப்புக்களின் நிதிப்பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்ட இமாலயப்பிரகடன விவகாரத்தில் தம்மை ஈடுபடுத்தியமை தொடர்பில், கனேடியத் தமிழர்களுக்கு மட்டுமல்ல, தமது அமைப்பின் உறுப்பினர்களுக்குக் கூடத் தெரியாமல் செயற்பட்டமை CTC யின் அப்பட்டமான ஜனநாயக மறுப்பு.

குறிப்பாக இவ்வாறு எதேச்சாதிகாரமாக ஈழத்தமிழர்களை ஒரு இனமாகவோ, அவர்களின் அரசியல் அபிலாஷைகளின் பிரதிபலிப்போ இல்லாமல் பிரகடனம் செய்யும் அதிகாரம் CTC க்கு யாரால் வழங்கப்பட்டது என்பதே பெரும் பிரளயத்தைத் தோற்றுவித்துள்ளது.

ஜனநாயகப் பண்பு

குறைந்தபட்சம் தமது உறுப்பினர்களுடன் கலந்தாலோசிக்காமாலும், சமூகம் சார்ந்த பிரதிநிதிகளுடனோ உரையாடல்களோ கலந்தாலோசனைகளோ நடத்தப்படாமல் இவர்கள் இவ்வாறு செயற்பட்டமை தமிழர்களை விழிப்படையச் செய்துள்ளது.

தமிழர்களுக்கான நீதி வேண்டி, தமிழர்களுக்கான உரிமை வேண்டி ஒரு உரையாடற் தளத்தை ஏற்படுத்துவதும், பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள முனைது என்பதும் வேறு.

ஆனால், ஒரு மக்கள் குரலாக தம்மை அடையாளப்படுத்தும் அமைப்பு, அதனை ஒரு பிரகடனமாக வெளி உலகிற்கு அறிவிக்கும் வரை, இரகசியம் காத்தமையும், தாம் சார்ந்த மக்களுடனோ, அல்லது தமது அமைப்புச் சார்ந்தோ கலந்தாலோசிக்காமல் நடவடிககையில் ஈடுபட்டமை, ஜனநாயகப்பண்புகளுக்கு விரோதமானது என்பதை மறுக்க முடியாது.

கோபத்தைத் தணிக்கும் முயற்சிகள்

இன்றுவரை இதற்காகப் பெறப்பட்ட நிதி, அந்நிதி செலவு செய்யப்படும் முறை குறித்து CTC தெளிவுபடுத்தல்களை வழங்கவில்லை.

மேலும், அண்மையில் CTC நடத்திய ஊடக சந்திப்பில் கூட, வெறும் மழுப்பலான பதில்களே வழங்கப்பட்டன என்பதும், தமது செயலை மீண்டும் மீண்டும் நியாயப்படுத்தும் அல்லது தம் மீது திரும்பியுள்ள சமூகத்தின் கோபத்தைத் தணிக்கும் முயற்சிகள் இடம்பெற்றனவே அன்றி, பொறுப்புக்கூறலுக்கான சமிக்ஞைகளை அவர்கள் வெளிப்படுத்தவில்லை.

குறிப்பாக, CTC யின் ஊடக சந்திப்பின்போது, ‘இனப்படுகொலை’ என்ற பதத்தை CTC உத்தியோக பூர்வமாகப் பயன்படுத்துவதில்லை என்றும், தமக்கு அவ்வாறான ஆலோசனைகள் வழங்கப்பட்டிருப்பதாகவும் CTC யின் முன்னாள் தலைவர் சிவன் இளங்கோ அவர்கள் தெளிவுபடுத்தியமை, CTC வேறு ஒரு நிகழ்ச்சி நிரலுக்குள் சென்றுவிட்டது என்பதை அம்பலபடுத்தியது.

மேலும், நீங்கள் உணர்வது போலவே நாங்களும் உணர்கிறோம் ஆனால், உத்தியோகபூர்வமான பேச்சிலோ அல்லது உத்தியோகபூர்வமான அறிக்கையிலோ நாங்கள் GENOCIDE (இனப்படுகொலை) என்ற சொல்லைப் பயன்படுத்தவில்லை என்று அவர் தெளிவுபடுத்தியமை CTC யின் செயற்பாட்டுத் தளம் தமிழர்களுக்கான நீதிவேண்டிய செயற்பாடுகளை மலினப்படுத்துவது மட்டுமல்லாமல் வெகுவாகப் பலவீனப்படுத்தும் ஒரு வாக்குமூலமாகவே அமைந்துவிட்டது. மேலும், ‘கனடாவில் இருக்கற ஆக்களைச் சொல்லுங்கோ கொஞ்சம் அடக்கி வாசிக்கச் சொல்லி / Exact same Words’ என்று CTC யின் இந்நாள் தலைவி ரவீனா ராஜசிங்கம் கூறியமை, தாயகத்தில் வாழும் தமிழர்கள் மீது கனடாவில் வாழும் ஈழத்தமிழர்கள் கொண்டிருக்கும் கரிசனைகளையும், அளவுகடந்த அன்பையும், அம்மக்களின் எதிர்காலம் மீது கனடாவில் வாழும் தமிழர்கள் கொண்டுள்ள அக்கறையையும் இழிவுபடுத்துவதாக அமைந்துவிட்டது.

இவ்வாறான நிலைப்பாட்டு விளக்கங்களுடன், CTC எவ்வாறு கனேடியத் தமிழர்களின் குரலாக தம்மை நியாயப்படுத்த முனைகிறது என்ற கேள்வி இயல்பாகவே கனடா வாழ் தமிழர்களிடம் வெளிப்பட்டது.

ரவீனா ராஜசிங்கம் யார்?

கனேடியத் தமிழர்கள் அடக்கி வாசிக்கவேண்டும் என்று கூறிய ரவீனா ராஜசிங்கம் அங்கம் பெறும் CTC, எவ்வாறு தாம் மட்டும் கனேடியத் தமிழர்களின் சார்பாக பிரகடனம் செய்யும் அளவுக்கு அதிகாரத்தைப் பெற்றது என்ற குமிறல்களை கனேடியத் தமிழ்ச் சமூகம் வெளிப்படுத்திவருகிறது.

எனவே, கனடா வாழ் தமிழர்களின் உணர்வுகளையும், கருத்துக்களையும் புறம்தள்ளிப் பயணிக்குமாறு, எங்கிருந்தோ பலமான உத்தரவு இவர்களுக்கு வந்துள்ளதாகவே சந்தேகிக்கப்படுகிறது.

இவ்வாறான நிலையிற்தான், ‘கனேடியத் தமிழர் கூட்டு’ எனும் கரிசனையாளர் குழு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

அமுக்கப்பட்ட உணர்வுகளின் வெடிப்பாக வீரியம் கொண்டுள்ளது ‘கனேடியத் தமிழர் கூட்டு’.

CTC யின் உருவாக்கத்தில் பங்கெடுத்தவர்களும், அதன் தொடக்ககால செயற்பாடுகளில் பங்கெடுத்தவர்களும், சமூகத்தின் பல்வேறு நிலைகளில் உள்ள அக்கறையாளர்களும் ஒரு புள்ளியில் இணைந்து ‘கனேடியத் தமிழர் பேரவை’ (CTC) எனும் அமைப்பிடம் ஜனநாயக முறையில் பொறுப்புக்கூறலையும், வெளிப்படைத் தன்மையையும், நீதியையும் வேண்டிநிற்கின்றனர்.

சாதகமான பதில் இல்லை

வேடிக்கை என்னவெனில், ‘கனடா’ எனும் ஜனநாயகம், பேச்சுரிமை, கருத்துரிமை கொண்ட நாட்டின் தெருக்களில், இலங்கையின் இன அழிப்பு அரசுகளுக்கு எதிராக நீதி வேண்டிய கனேடியத் தமிழர்கள், கனடாவில், அம்மக்களின் குரலாக இயங்குவதாக பிரகடனப்படுத்தும் அமைப்பிடம் நீதிவேண்டி நிற்பது வேதனைக்குரியது.

இக்குழுவினர் CTC தரப்பினருடன் பலசுற்றுப் பேச்சுவார்த்தைகளையும், சந்திபுக்களையும் நடத்தி அவர்களிடம் பொறுப்புக்கூறலை வலிறுயுத்திய பின்னணியில், அம்முயற்சிகளுக்கு CTC தரப்பினரிடம் இருந்து சாதகமான சமிக்ஞைகள் வெளிப்படுத்தப்படாத நிலையில், தமது குழுவின் தோற்றம் தொடர்பிலும், தமது நோக்கம் தொடர்பிலும் விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பை கடந்த வெளிக்கிழமை ‘கனேடியத் தமிழர் கூட்டு’ நடாத்தியது.

முகங்களை அம்பலப்படுத்தல்

தமது குழு ஒருங்கிணைக்கப்பட்டு ஒரு சில வாரங்களிலேயே, மக்களுக்கு தமது முகங்களை அம்பலப்படுத்தி, தமது நோக்கங்கள் குறித்தும், முயற்சிகள் குறித்தும் அக்குழுவினர் தெளிவுபடுத்தியமை, மிகச் சிறந்த ஜனநாயகப் பண்பாகவே அடையாளபடுத்த முனைகிறது.

மேலும், ஊடக சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்ட முறை, ஊடகங்களையும், ஊடகவியலார்களையும் ஒருங்கிணைத்த முறை, சிறந்த ஒலி-ஒளி அமைப்பு, சமூக ஊடகங்கள் ஊடான நேரலை, நேர்த்தியான தெளிவுபடுத்தல்கள் என்று புருவங்களை உயரச் செய்யும் வகையில் அன்றைய ஊடக சந்திப்பு அமைந்தது.

இதில் வியப்பு என்னவென்றால், ஊடக சந்திப்பை நடாத்திய குழு உறுப்பினர்களும் சரி, நான் அறிந்தவரையில் அக்குழுவில் தம்மை இணைத்துக்கொண்டவர்களும் சரி, எண்ணங்களாலும், அபிப்பிராயங்களாலும் வேறுபட்டவர்கள்.

ஆனால், ஈழத்தமிழர்களுக்கான அரசியல் அபிலாஷை, அவர்களுக்கான நீதிகோரல், போருக்குப்பின்னரான கட்டுமானம் என்ற பிரதான கோட்பாடுகளில் இசைந்தவர்களாக தமது ஒருங்கிணைப்பைப் பிரதிபலித்தனர்.

குறிப்பாக ‘கருத்துக்கள் வேறாகினும், செயல்களில் ஒன்றுபடுவோம்’ என்ற முன்னுதாரணத் துடிப்பை அவதானிக்க முடிந்தது.மேலும், இமாலயப் பிரகடன விவகாரம் உட்பட, நீண்டகாலமாக CTC முன்னெடுத்துவரும் தன்னிச்சையான போக்கு, வெளிப்படைத்தன்மையற்ற செயற்பாடு, பொறுப்புக்கூறலைப் புறக்கணித்தல் போன்றவற்றிற்கு எதிராக நியாயம் கோரி, மக்கள் மன்றத்தை அவர்கள் நாடியுள்ளனர். மக்கள் சக்தியே உலகின் மகா சக்தி என்ற கோட்பாட்டின் அடிப்படியில், மக்கள் மன்றை நோக்கி 'கனேடியத் தமிழர் கூட்டு' அடி எடுத்து வைத்துள்ளது.

மக்கள் சந்திப்புக்களையும், ஊடக சந்திப்புக்களையும், திறந்த உரையாடல்களையும் புறக்கணித்துவரும் CTC க்கு இதுவொரு சவால் மிக்க தருணம்.

அதன் அடுத்த படிநிலையாக, இன்னமும் ஒரு சில வாரங்களில் (March 22..?) மக்களுடனான நேரடிக் கலந்துரையாடல்களை இக்குழு நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.

பரிகாரம் தேடும்வரை---

இது townhall வகையிலான ஒரு திறந்த உரையாடலாக இடம்பெறவுள்ளது. (எனினும், கூட்டம் நடைபெறும் இடத்தின் கொள்ளவைப்பொறுத்து கருத்தாளர்கள் எண்ணிக்கையை தீர்மானிக்கும் முகமாக, முன்பதிவுகள் கோரப்படலாம்.)

ஆக மொத்ததில், CTC தனது தவறுகளுக்குப் பரிகாரம் தேடும்வரை, ‘கனேடியத் தமிழர் கூட்டு’ வீரித்துடன் செயற்படும் என்று உறுதிபூண்டிருப்பதை உணரமுடிகிறது.

ஆயினும், CTC எனும் அமைப்பை செயற்படாமல் முடக்குவதோ, அல்லது அதனைக் கைய்யகப்படுத்துவதோ தமது கூட்டின் நோக்கமல்ல என்பதையும் அக்குழு தெளிவுபடுத்தியுள்ளது.

மேலும், தமது கூட்டு என்பது, கரிசனையாளர் குழுவே அன்றி, அது ஒரு அமைப்பு அல்ல என்றும் விளக்கமளித்துள்ளனர்.

அத்துடன், இக்கூட்டின் இருப்பும்-தொடர்ச்சியும்-நீட்சியும் CTC யின் முடிவுகளைப் பொறுத்தே அமையும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, ‘கனேடியத் தமிழர் கூட்டு’ CTC யிடம் வேண்டி நிற்கும் பொறுப்புக்கூறலும், மறுசீரமைப்பும், தவறுகளுக்கான பரிகாரமும், நீதியும் இக்கூட்டின் பின்னால் திரளும் மக்கள் சக்தியிலேயே தங்கியுள்ளது.

இதுவரை ஏற்பட்ட சலசலப்புக்களை இலாவகமாகச் சமாளித்த CTC, ஒருங்கிணைக்கப்படும் மக்கள் சக்தியை எவ்வாறு எதிர்கொள்ளப்போகிறது என்பதை தமிழர் கூட்டின் செயல்கள் வெளிப்படுத்தும்.

விழிப்படைவதற்கான முதல் நகர்வு

இதுவரையில் உறங்கு நிலையில் குமுறிய மக்களின் வலிகளையும், உணர்வுகளையும் தாங்கி, அந்த உணர்வுகளுக்கு உருவகம் கொடுத்துள்ள ‘கனேடியத் தமிழர் கூட்டு’ சாதனை செய்யுமா..? என்பதை எதிர்காலம் தீர்மானிக்கும்.

ஆனால், உலகெங்கும் வாழும், ஈழத்தமிழர்களை விழிப்படையச் செய்யும் முதலடியை ‘கனேடியத் தமிழர் கூட்டு’ எடுத்துவைத்திருப்பதாகவே கணிக்க முடிகிறது.

ஜனநாயகப் பண்புகளோடும், வெளிப்படைத்தன்மையோடும், கருத்துச் சுதந்திரத்தோடும் உருவாக்கப்பட்டுள்ள ‘கூட்டு’ ஒரு புதிய தொடக்கத்தின் முதல் அத்தியாயம் என்றே எண்ணத் தோன்றுகிறது.

இனவாதத்தை ஊட்டிவளர்த்த கொடுங்கோலர்கள் ராஜபக்சக்களையே துரத்தியடித்தது மக்கள் சக்தியே.

எனவே, வரலாறு என்ன என்பதைப் பதிவுசெய்யக் காத்திருப்போம்.

உதயன் S. பிள்ளை (சுயாதீன ஊடகவியலாளர்)

(ஆசிரியர் குறிப்பு - இது பற்றிய மாற்றுக் கருத்துக்களை அனுப்பினால் ஒருவன் ஆசிரிய பீடம் பிரசுரிக்கும். நாகரிகமாகவும் ஒழுக்க விதிகளுக்கு ஏற்பவும் அனுப்பப்படும் ஆக்கங்கள் மாத்திரமே பிரசுரிக்கப்படும். newsroom@oruvan.com)