சீன - இந்திய வர்த்தகம் 11 இலட்சம் கோடி; ஆனால் தமிழர் பகுதியில் மாத்திரம் பீஜிங் வந்துவிடக்கூடாது!: தமிழ்தேசியக் கட்சிகளின் பலவீனத்தை அறிந்து செயற்படும் புதுடில்லி

OruvanOruvan

சீன - இந்திய வர்த்தகம் மிக உயர்வாக இருக்கும் நிலையில் வடக்குக் கிழக்குத் தமிழர் தாயகப் பகுதிகளில் சீனா மேற்கொள்ளவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் சீனத் தூதுவர் வந்து செல்கின்றமை தொடர்பாக இந்தியா ஏன் கவலை கொள்கிறது என்ற கேள்விகள் மிகச் சமீபகாலமாக எழுகின்றன.

யாழ்ப்பாணம், திருகோணமலை உள்ளிட்ட தமிழர் பகுதிகளில் இதுவரையும் சீனா எந்தவொரு பெரிய திட்டங்களையும் வகுக்கவில்லை.

ஆனால், சில பகுதிகளில் தமக்குரிய பொருளாதாரத் தேடல்களை சீனா ஆரம்பித்திருக்கிறது. குறிப்பாக கடல் அட்டை பணியாளர்களுக்கு உதவி வழங்குவது குறித்து சீனா ஆராய்கின்றது. சில பணியாளர்களுக்கு உதவியும் வழங்கியுள்ளது.

அத்துடன், பல்கலைக்கழக மாணவர்களுக்குத் தேவையான சில புலமைப்பரிசில் திட்டங்கள் பற்றியும் சீனா கலந்துரையாடி வருகின்றது.

சீனாவுக்கு யாழ்ப்பாணத்தில் தூதரகம் இல்லை

ஆனால் இந்தியத் துணைத் தூதரகம் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ளமை போன்று எந்த ஒரு அலுவலகமும் சீனாவுக்கு யாழ்ப்பாணத்தில் இல்லை.

இப்பின்னணியில் சீனா தொடர்பாகக் கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகமும், யாழ்ப்பாணத்தில் உள்ள துணைத் தூதரகமும் ஏன் அதிகளவு அரசியல் காழ்ப்புணர்வு கொண்டுள்ளது எனப் புரியவில்லை.

சீன - இந்திய வர்த்தகம் கடந்த 2023 ஆம் ஆண்டில் இந்திய ரூபாவில் பதினொரு இலட்சத்து 15 ஆயிரம் கோடியாக உயர்வடைந்துள்ளது என்றும் இந்த உயர்வு முன்னைய ஆண்டை விட 8.4 சதவீத அதகரிப்பாகும் எனவும் சீன சுங்கத்துறை வெளியிட்டுள்ள புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன - இந்திய எல்லைகளில் இருதரப்பு மோதல்கள் தொடரும் நிலையிலும், சீன - இந்திய வர்த்தகம் உயர்வடைந்து வருவதாக சீன சுங்கத்துறை சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தியாவிடம் இருந்து சீனா மேற்கொண்ட இறக்குமதி இந்திய ரூபாவில் ஒரு இலட்சத்து 43 ஆயிரத்து 300 கோடியாக குறைந்துள்ளது.

எல்லை மோதலுக்கு மத்தியிலும் வருமானம்

இது முன்னைய ஆண்டை விட 37.9 சதவீதம் குறைவாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் சீன இறக்குமதிகளை இந்தியா அதிகரித்தும் உள்ளது.

குறிப்பாக ஒட்டுமொத்த இறக்குமதி 1.1 சதவீதம் அதிகரித்துள்ளது. சீனாவின் வர்த்தக உபரி 877.6 பில்லியன் டொலராக உயர்ந்தது என்றும் அந்தப் புள்ளி விபரத்தில் கூறப்பட்டுள்ளது.

அதேவேளை 2015 இல் இருந்து 2021 வரை 75. 30 வீத வளர்ச்சி என்றும் அந்தப் புள்ளி விபரத்தில் மேலும் கூறப்பட்டிருக்கிறது.

சீன சுங்கத்துறையின் இத் தகவலை இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

சீன - இந்திய எல்லை மோதல்கள் இருந்த போதிலும், சீன முதலீட்டுக்கு இந்தியா கதவுகளைத் திறந்திருக்கும் என்று தகவல் தொழில்நுட்ப துணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் புதுடில்லியில் அறிவித்திருந்தார்.

இதன் காரணமாகவே கடந்த 2023 ஆண்டு டிசம்பர் மாதம் வரை சீன - இந்திய வர்த்தகம் அதிகரித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

எந்தவொரு நிறுவனத்துடனும் வர்த்தகம் செய்வதற்கு இந்தியா தயாராக இருப்பதாகவும் சீனா உட்பட அனைத்துச் சர்வதேச முதலீட்டிற்கும் இந்தியா கதவுகளைத் திறந்திருக்கும் எனவும் துணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறியிருந்தார்.

அதேநேரம் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் சீனாவுக்குப் பயணம் செய்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலங்கைத் தீவில் முதலீடு செய்யத் தயாரகவுள்ள சீன முதலீட்டாளர்களைச் சந்தித்து உரையாடியிருந்தார்.

ரணில் கூறிய தகவல்

பீஜிங்கில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் நடைபெற்ற முதலீடு, வர்த்தகம் மற்றும் சுற்றுலா தொடர்பான அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றியிருந்த ரணில், இலங்கையின் புவிசார் அமைவிடம் காரணமாக ஆசிய பிராந்தியத்தில் மேற்குச் சந்தையை வெற்றிகொள்வதற்கு விசேட சந்தர்ப்பம் காணப்படுவதாக சீன முதலீட்டாளர்களிடம் சுட்டிக் காட்டியிருந்தார்.

உலகில் உள்ள அனைத்து சக்திவாய்ந்த பொருளாதார நாடுகளுடன் நட்புறவாகச் செயற்படுவதே இலங்கையின் எதிர்பார்ப்பு எனவும், அதன் ஊடாக இலங்கையின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கு அர்ப்பணிப்பதே தமது நோக்கமாகும் எனவும் ஜனாதிபதி ரணில் வலியுறுத்தியிருந்தார்.

ஆகவே இவ்வாறு இந்தியாவும் இலங்கையும் சீனாவுடன் உறவுகளையும் வர்த்தகச் செயற்பாடுகளையும் மேற்கொண்டு வரும் சூழலில், எதற்காக தமிழர் பகுதிகளில் சீனா தொடர்பான அச்சத்தை இந்தியா வெவ்வேறு கோணங்களில் வெளிப்படுத்துகின்றது?

2009 இற்குப் பின்னரான சூழலில் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகள் தங்கள் சுயமரியாதையை அமெரிக்க - இந்திய அரசுகளுக்கு விலைபேசியுள்ளமை கண்கூடு.

புதுடில்லியின் நம்பிக்கை

இதன் காரண - காரியமாகவே அமெரிக்க இந்திய அரசுகள் ஒட்டுமொத்த ஈழத்தமிழர்களின் முதுகில் சவாரிவிடுகின்றன என்பதும் பகிரங்கம்.

குறிப்பாக இந்தியா ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலை விவகாரத்தைப் பயன்படுத்தி இலங்கைத்தீவில் சிங்கள ஆட்சியாளர்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம் என புதுடில்லி நம்புகின்றது.

ஆனால், சிங்கள ஆட்சியாளர்களோ, மகாநாயக்கத் தேரர்களோ இந்தியாவை முழுமையாக நம்பத் தயாராக இல்லை.

இது இந்தியாவுக்குத் தெரியாத சங்கதியுமல்ல.

இதற்காகவே பௌத்த விகாரைகளுக்கும் நிதியுதவி வழங்கும் திட்டங்களை டில்லி அவ்வப்போது செய்து வருகின்றது.

இந்தியாவின் புத்தகாயாவில் பௌத்த விகாரைகள் கட்டப்பட்டுக் கட்டுநாயக்காவிலிருந்து நேரடி விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டாலும், சிங்கள ஆட்சியாளர்கள் இந்தியாவை முழுமையாக நம்பத் தயாராக இல்லை என்பதை புதுடில்லி உணராதவரை ஈழத்தமிழர் விவகாரத்திற்கும் தீர்வில்லை.

இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் சீன செல்வாக்கினை தடுக்க சிங்கள ஆட்சியாளர்களுடன் மாத்திரம் குறிப்பாக “இலங்கை அரசு” என்ற கட்டமைப்பை மாத்திரம் திருப்திப்படுத்தினால் போதும் என்று இந்தியா கருதுவது டில்லியின் புவிசார் அரசியல் சூழலில் சாதகமான நிலையை தோற்றுவிக்காது.