11 கோடி அரச நிதியால் முல்லைத்தீவு மன்னாருக்கு வந்த சிக்கல்: திண்டாடும் அதிகாரிகள்! கொழும்பிற்கு அழைத்த பிரதமர்!!

OruvanOruvan

முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட வரவு - செலவுத் திட்ட நிதியை எப்படிப் பங்கிட்டுச் செலவு செய்வது என்ற சர்ச்சை அரச நிர்வாகக் கட்டமைப்புக்குள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருப்பதாக அறிய வருகின்றது.

வரவு - செலவுத் திட்டத்தில் மாவட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுக் கிடைக்கும் நிதியை மாவட்டத்தில் எத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்களோ அதற்கேற்ப சமனாகப் பங்கிட்டு, அவர்களின் இசைவோடு திட்டங்களை தெரிவு செய்யுமாறு ஜனாதிபதியினால் வாய்மொழி மூலமும் - மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் பூரண ஒத்துழைப்புடன் நிறைவேற்றுமாறு சுற்று நிரூபம் மூலமும் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதிக்கான திட்டங்களை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் காதர் மஸ்தான் தன்னிச்சையாகத் தேர்வு செய்து முடிவு செய்திருக்கின்றமையால் குழப்பம் நிலவுவதாகச் சுட்டிக்காட்டப்படுகின்றது.

பன்முகப்படுத்தப்பட்ட வரவு - செலவு திட்ட நிதியில் வன்னித் தேர்தல் மாவட்டத்தின் கீழ் உள்ள மூன்று நிர்வாக மாவட்டங்களுக்கும் தலா 11 கோடி ஐம்பது லட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய இரு மாவட்ட அபிவிருத்தி நிதியை எப்படிச் செலவிடுவது என்பது தொடர்பில் அபிவிருத்திக் குழுவின் தலைவர் காதர் மஸ்தான் எதேச்சையாக முழுமையான திட்டங்களையும் தேர்வு செய்துள்ளார். ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதனை ஏற்க முடியாது எனத் தெரிவித்து வருகின்றனர். இதனால் மாவட்ட செயலக அதிகாரிகள் நெருக்கடியை எதிர்கொண்டு திண்டாடுகின்றனர்.

இது தொடர்பாக மற்றைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தரப்பிலிருந்து தெரிவிக்கப்படும் கடும் ஆட்சேபனையையும் எதிர்ப்பையும் சமாளிப்பதற்காக, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களில் கிராம மட்ட சந்திப்புக்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. அங்கு சம்பந்தப்பட்டோரைக் கூட்டி, விடயங்களை நேரடியாக ஆராய்ந்து, திட்டங்களை முடிவு செய்ய முஸ்தீபுகள் முன்னெடுக்கப்பட்டன.

ஆனால், அதனைத் தடுக்கும் வகையில் இரு மாவட்ட அரச அதிபர்களையும் நாளை(வெள்ளிக் கிழமை) சந்திக்குமாறு பிரதமர் தினேஷ் குணவர்த்தனா அழைத்துள்ளார்.

இந்த நிலையில் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் முடிவை அதிகாரிகள் மீது திணிக்கும் வகையில் நாளை காலை 10 மணிக்கு நாடாளுமன்றக் கட்டிடத்தில் இந்த விசேட கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டு, அக்கலந்துரையாடலிற்கு மன்னார், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர்களும் அழைக்கப்பட்டுள்ளனர் என்று விடயமறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

இக் கலந்துரையாடலுக்கு அமைச்சர் பிரசன்ன ரணதுங்காவும், காதர் மஸ்தானும் அழைக்கப்பட்டிருக்கின்றனர் எனவும் தெரியவருகின்றது.

தேர்தல் நெருங்கும் சமயத்தில் இப்படி மாவட்டத்தின் எம்.பிக்களை அதிருப்திக்கு உள்ளாக்குவது ஆட்சியாளரான ரணிலுக்கு உசிதமான விளைவுகளைத் தராது என்பது மட்டும் நிச்சயம்.