மொழியைத் தொலைத்த இனம் முகவரியைத் தொலைத்த இனமாகும்: உலக தாய்மொழி தினம் இன்றாகும்

OruvanOruvan

உலகத் தாய்மொழி தினம் இன்று உலக மக்களால் கடைப்பிடிக்கப்படுகின்றது.

மொழியியல் மற்றும் கலாசார பன்முகத்தன்மை குறித்த விழிப்புணர்வை மேம்படுத்தி தாய் மொழி பயன்பாட்டை மேலோங்கச் செய்யும் நோக்கில் பெப்ரவரி 21 ஆம் திகதி உலக தாய்மொழி தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

“மொழி ஓர் இனத்தின் அடையாளம், பண்பாட்டின் சின்னம். மொழியைத் தொலைத்த இனம் முகவரியைத் தொலைத்த இனமாகும்”.

1952 ஆம் ஆண்டு பெப்ரவரி 21ஆம் திகதி, அன்றைய கிழக்குப் பாகிஸ்தான் தலைநகர் டாக்காவில் வங்காள மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்கக் கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின் போது நான்கு மாணவர்கள் உயிர் நீத்தனர். அவர்களின் நினைவாக உருவானதே உலக தாய்மொழி நாள்.

இவ்வாறான நிலையில், ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பான யுனெஸ்கோ கடந்த 2000 ஆம் ஆண்டில் இந்நாளை உலக தாய்மொழி தினமாக பிரகடனம் செய்தது.

அன்று தொடங்கி, இன்று வரை உலக மக்களால் பயன்படுத்தப்படும் அனைத்து மொழிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக பெப்ரவரி 21 ஆம் திகதி உலக தாய்மொழி தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

தாய் மொழியை புறக்கணித்து அந்நிய மொழிகளை பயன்படுத்திய நாடுகள் வீழ்ச்சியையே சந்தித்துள்ளன. உலகிற்கு நாகரிகத்தை கற்றுக்கொடுத்த, வளமான இலக்கிய பாரம்பரியத்தை கொண்ட ஆறு மொழிகளில் தமிழும் முக்கிய இடம்பெறுகிறது.

சமஸ்கிருதம், கிரேக்கம், ஹீப்ரு, லத்தீன், சீனம் ஆகிய மொழிகளுடன் தமிழ் மொழியும் மூத்த மொழியாக முக்கியத்துவம் பெறுகின்றது. தமிழ் ஹீப்ரு மொழியைக் காட்டிலும் முந்தியது.

கிறிஸ்துவுக்கு முந்தைய வரலாற்றை கொண்டு. செழுமையான இலக்கியங்கள், தொல்லியல் சான்றுகள், நேர்த்தி மிக்க இலக்கண நூல்கள் என தமிழ் கொண்டுள்ள தனித்துவம் சிறப்பு மிக்கது.