17,545 கோடி ரூபாயில் இருந்து பூஜ்ஜியத்திற்கு வந்த சொத்தின் நிகர மதிப்பு: கோடீஸ்வரர் என்ற அந்தஸ்தை இழந்தார் பைஜு ரவீந்திரன்
சமீபத்திய ஃபோர்ப்ஸ் பில்லியனர் குறியீட்டின் படி, எட்டெக் (Edtech company) நிறுவனமான பைஜுவின் (Byju's) நிறுவனர் பைஜு ரவீந்திரனின் நிகர மதிப்பு பூஜ்ஜியத்திற்குச் சரிந்துள்ளது.
இதன்படி, கடந்த ஆண்டு ரவீந்திரனின் நிகர மதிப்பு 17,545 கோடியாக (2.1 பில்லியன் டொலர்) இருந்ததுடன் தற்போது, நிறுவனம் நிதி மற்றும் நிர்வாக ரீதியாக கடுமையான நெருக்கடிகளை சந்தித்துவருகின்றது. இதனால் அவரின் சொத்தின் நிகர மதிப்பு பூஜ்ஜியமாகியுள்ளது.
2024 ஆம் ஆண்டின் 200 இந்திய செல்வந்தர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் முகேஷ் அம்பானி முதலிடத்திலும், கவுதம் அதானி இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.
கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட பட்டியலில் இருந்த நான்கு பேர் இம்முறை பட்டியலில் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பைஜுவின் நிறுவனர் பைஜு ரவீந்திரனின் நிகர மதிப்பு பூஜ்ஜியத்திற்குச் சரிந்துள்ளதாக ஃபோர்ப்ஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2011 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பைஜு நிறுவனம், குறுகிய காலத்தில் இந்தியாவின் மதிப்புமிக்க நிறுவனங்களில் ஒன்றாக மாறியது.
2022 ஆம் ஆண்டு அதின் மதிப்பு 22 பில்லியன் டொலராக உயர்ந்தது. அத்துடன், பைஜூவின் பயன்பாடு இந்தியாவில் கல்வி முறையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.
ஆரம்ப கல்வி முதல் உயர் கல்வி வரையில் பைஜூவின் ஆதிக்கம் மிக உச்சத்தில் இருந்தது. எனினும், அண்மை காலமாக ஏற்பட்ட பல்வேறு சிக்கல்கள் நிறுவனத்தை கடுமையாக பாதித்தது.
நிறுவனத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக ரவீந்திரன் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார். அண்மையில் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்.
பைஜு நிறுவனம் வெளிநாட்டு முதலீடுகளிலும் கடும் சிக்கலை எதிர்கொண்டுள்ளது. அமலாக்க இயக்குநரகம் (ED) அது குறித்த விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
அந்நிய நேரடி முதலீடு என்ற பெயரில் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பைஜூஸ் நிறுவனம் 9,754 கோடி ரூபாய் அனுப்பியுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது.
அத்துடன் 944 கோடி ரூபாய் விளம்பரம் மற்றும் சந்தைப்படுத்துதல் செலவுகளில் அந்த நிறுவனம் வரவு வைத்துள்ளதுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்நிய முதலீடுகள் தொடர்பாக போதுமான ஆவணங்களை சமர்ப்பிக்க தவறியதன் மூலம் அந்த நிறுவனம் 9,362 கோடி ரூபாய்க்கு அந்நியச் செலாவணி மோசடியில் ஈடுபட்டுள்ளது கண்டறியப்பட்டது.
இவ்வாறான பின்னணியிலேயே, பைஜுவின் நிறுவனர் பைஜு ரவீந்திரனின் நிகர மதிப்பு பூஜ்ஜியத்திற்குச் சரிந்துள்ளதாக ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது.