இந்திய தேர்தல் களத்தில் பிரம்மாஸ்திரமாகும் கச்சதீவு: காங்கிரஸ் பிரதமர்களை சாடும் பாஜக

OruvanOruvan

Katchatheevu

இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கான நாள் நெருங்கிவரும் நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. நாளுக்கு நாள் பல்வேறு உத்திகளை கையாண்டு பாஜக மற்றும் காங்கிரஸ் பிரசாரங்களை மேற்கொண்டுவருகின்றது.

வடக்கு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தொடர்பான ஆதரவுத்தளம் அதிகரித்துவரும் நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக தரப்பினர் தென் மாநில வாக்குகளை குறித்து வைத்து காய்களை நகர்த்த தொடங்கியுள்ளனர்.

கச்சதீவு அரசியல்

இந்தியாவின் இறைமைக்குள் காணப்பட்டிருந்த கச்சதீவானது இலங்கைக்கு ஒப்பந்தத்தின் மூலம் 1974ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.

அப்போது இந்தியாவின் பிரதமராக இந்திரா காந்தியும் இலங்கையின் பிரதமராக சிறிமாவோ பண்டாரநாயக்கவும் காணப்பட்டிருந்தனர். தமிழகத்தில் திமுக ஆட்சியிலிருந்தது. மு.க.கருணாநிதி முதலமைச்சராக செயற்பட்டிருந்தார்.

பிரித்தானிய ஆட்சிக்காலத்தில் 1920இல் கச்சதீவு அவர்களின் ஆளுகையின் கீழ் வந்த போதிலும் 1921ஆம் ஆண்டு இலங்கை தனக்கு சொந்தம் என உரிமை கோரியிருந்தது.

கச்சதீவு இலங்கையின் நெடுந்தீவிற்கும், தமிழகத்தின் இராமேஸ்வரத்திற்கும் இடையில் காணப்படும் 285 ஏக்கர் உடைய தீவு. தற்போது யாழ் மாவட்டத்தின் கீழ் உள்ளது.

பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் இந்திய மற்றும் இலங்கை மீனவர்கள் குறித்த தீவினைப் பயன்படுத்தியிருந்தனர். ஓய்வெடுப்பதற்கும், மீன்பிடி வலைகளை உலரவிடுவதற்கும் தீவு பயன்படுத்தப்பட்டது.

ஆனாலும் இந்திய மற்றும் இலங்கை கடற்பாதுகாப்பு சட்டத்தின் ஊடாக இலங்கை வசமானது. ஆனாலும் பத்து வருடங்களுக்கு இந்திய மீனவர்களுக்கு பழைய உரிமைகள் வழங்கப்பட்டிருந்தது.

ஒப்பந்தத்தின்போது முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஸ்வரன் சிங் 1974ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில், “பாக் ஜலசந்தியில் கடல் எல்லையை வரையறுக்கும் இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் நியாயமானதாகவும், சமமானதாகவும் கருதப்படும் என்று நான் நம்புகிறேன்.

அதே சமயம், இந்த ஒப்பந்தத்தின் மூலம், கடந்த காலங்களில் இரு தரப்பினரும் அனுபவித்து வந்த மீன்பிடித்தல், புனித யாத்திரை மற்றும் கப்பல் போக்குவரத்து ஆகியவற்றின் உரிமைகள் எதிர்காலத்துக்காக முழுமையாக பாதுகாக்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்திருந்தார்.

உண்மையில் கச்சதீவு தமிழகத்திற்கு சொந்தமாக காணப்பட்ட போதிலும் நிலம் தொடர்பான அதிகாரம் மத்திய அரசிடமே உள்ளது.

கடல், ஆகாயம், நிலம் தொடர்பில் வெளிநாடுகளுடன் ஒப்பந்தங்களில் ஈடுபடுவதற்கு மத்திய அரசிற்கே அதிகாரம் உள்ளது. அந்த வகையில் கச்சதீவு விடயம் என்பது தமிழகத்திற்கு தெரிந்த விடயம் என்ற போதிலும் மத்திய அரசின் முடிவுக்கு கட்டுப்பட வேண்டும்.

ஆனால், அதனை ஆரம்பத்தில் கருணாநிதி அதனைத் தடுத்திருக்க வேண்டும். தமிழ் மீனவர்களின் நலன்கருதி அவர் தடுப்பதற்கான அழுத்தத்தினை கொடுத்திருக்கலாம்.

வரலாற்று பின்னணி

இலங்கையில் அன்றைய காலத்தில் பாரிய பிரச்சினையாக மலையக தமிழ்த் தொழிலாளர்கள் காணப்பட்டனர். அவர்களை இந்தியாவிற்கு எப்படியாவது அனுப்ப வேண்டும் என்பதில் சிங்கள தலைமைகள் கங்கணங்கட்டிக் கொண்டிருந்த தருணம்.

இலங்கையில் தமிழ் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்குமாயின் சிங்கள அரசியலுக்கு அது சவாலாக மாறிவிடும் என்பதில் தென்னிலங்கை தலைவர்கள் உறுதியாக இருந்தனர்.

மலையக தமிழ் மக்களை தேர்தலில் பங்குபற்றாமல் தடுப்பதும், வாக்குரிமை நிராகரிப்பு இதன் வெளிப்பாடே. இந்த நிலையில் சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தத்தின் மூலம் 1964ஆம் ஆண்டு 525000 மலையக தமிழ் மக்கள் இந்தியாவிற்கு தமிழகத்திற்கு மீள அனுப்பட்டனர்.

இதன் தொடர்ச்சியாகவே கச்சதீவு ஒப்பந்தம் ஏற்பாடானது. இரு நாடுகள் இணக்கப்பாட்டுடன் மேற்கொண்ட விடயம் இது. மக்கள் நலனுக்குப்பால் ஆட்சியாளர்களின் நலனே பார்க்கப்பட்டது.

பாஜக சாடல்

இத்தகைய பின்னணியில் கச்சதீவினை வைத்து பாஜக அரசியல் செய்கின்றது. காங்கிரஸ் தான் கச்சதீவை இலங்கைக்கு தாரைவார்த்தது என்றும், அப்போதிருந்த தமிழக முதல்வர் கருணாநிதிக்கு எல்லாம் தெரியும் என பிரதமர் மோடி சாடியுள்ளார்.

இதனை வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரும் சுட்டிக்காட்டி வலியுறுத்தியுள்ளார். மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தாம் 21 முறை கச்சத்தீவு தொடர்பாக பதில் அளித்துள்ளதாகவும், இது திடீரென எழுந்த பிரச்சினை அல்ல.

பல ஆண்டுகளாக உள்ள இரு நாடுகளுக்கு இடையேயான ஒரு நேரடி பிரச்சினை எனவும் ஜெய்சங்கர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை காங்கிரஸ் கட்சியின் பிரதமர்களின் அலட்சியத்தினால் இந்த நிலை ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உண்மையில் தமிழ் மக்கள் அவர்களின் கைகளைக் கொண்டே அவர்களின் கண்கள் குத்தப்பட்ட சம்பவம் தான் இது. மலையகத் தமிழ் மக்களை மீள எடுத்துக் கொண்டமையும், தமிழக தமிழ் மீனவர்கள் பயன்படுத்தி கச்சதீவை இலங்கைக்கு கொடுத்தமையும், தற்போது வடக்கு தமிழ் மக்களையும் தமிழக தமிழ் மக்களையும் முட்டிமோத வைப்பதற்கும் கச்சதீவு பயன்படுத்தப்படுகின்றது.

ஆக இந்திய மத்திய அரசாக இருக்கலாம், இலங்கை அரசாக இருக்கலாம் அவர்கள் மனதில் இருப்பது தமிழ் மக்கள் மீதான விரோதப் போக்கேயன்றி வேறு எதுவும் இல்லை.

கச்சதீவு வெறுமனே உடன்படிக்கையல்ல அது சர்வதேச உடன்படிக்கை ஊடாக கைமாறிய விடயம். இதனை திரும்பத் திரும்ப பேசுவதினால் அர்த்தம் எதுவும் இல்லை. மாறாக எழுந்துள்ள பிரச்சனைகளை சுமூகமாக தீர்ப்பதற்கு இந்திய மத்திய அரசு காத்திரமான முடிவு எடுக்க வேண்டும்.

பா.யூட்