தேர்தலில் போட்டியிட மறுத்த நிர்மலா சீதாராமன் - காரணம் என்ன?: “நிதியமைச்சரிடமே பணம் இல்லையா”? என கேள்வி

OruvanOruvan

Nirmala Sitharaman refused to contest the elections

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் “தேர்தலில் போட்டியிடும் அளவிற்கு தன்னிடம் பணம் இல்லை” என இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் பிரச்சாரங்கள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக பரிசீலிக்குமாறு பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தன்னிடம் கூறியதாக இந்திய நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

”தமிழகம் அல்லது ஆந்திராவில் போட்டியிட பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா வாய்ப்பு வழங்கினார்.அது தொடர்பாக தீர்மானிப்பதற்கு சுமார் 10 நாட்கள் வரை எடுத்துக்கொண்டேன்.

பின்னர் போட்டியிட விரும்பவில்லை என எனது தீர்மானத்தை அறிவித்தேன். என்னிடம் தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு பணம் இல்லை.

எனக்கும் ஆந்திராவா? அல்லது தமிழ்நாடா? என்ற பிரச்சனை உள்ளது.தமிழகம் அல்லது ஆந்திராவில் போட்டியிட்டால் மதம், ஜாதி போன்றவை வெற்றிக்கான காரணிகளை தீர்மானிக்கும்.

அதனால் நான் தேர்தலில் போட்டியிடவில்லை. எனது முடிவை கட்சியும் ஏற்றுக் கொண்டுள்ளது” என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நாட்டின் நிதியமைச்சரிடமே போட்டியிடுவதற்கான பணம் இல்லையா? என்ற கேள்வி எழுந்தது.

இதற்கு பதில் அளித்த நிர்மலா சீதாராமன் "என்னுடைய சம்பளம், என்னுடைய சம்பாத்தியம், என்னுடைய சேமிப்பு. இந்தியாவின் ஒருங்கிணைந்த நிதி எனக்கு சொந்தம் கிடையாது" என பதிலளித்துள்ளார்.