சந்திரயான்-3 தரை இறங்கிய இடத்திற்கு'சிவசக்தி' என பெயர்: சர்வதேச விண்வெளி யூனியன் அங்கீகாரம்

OruvanOruvan

சந்திரயான் - 3 விண்கலத்திற்கு இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியால் சூட்டப்பட்ட “சிவசக்தி” எனும் பெயருக்கு சர்வதேச விண்வெளி யூனியன் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவால், ஸ்ரீ ஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து கடந்த வருடம் ஜூலை மாதம் 14 ஆம் திகதி சந்திரயான்-3 விண்ணில் செவலுத்தப்பட்டது.

இந்த விண்கலம் ஒகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி நிலவில் கால் பதித்தது.

குறித்த விண்கலத்திலிருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் நிலவின் தென்துருவத்தில் தரை இறங்கியதையடுத்து தென் துருவத்தில் கால் பதித்த முதல் நாடு என்ற பெருமையையும் இந்தியா பெற்றது.

மேலும், நிலவில் விக்ரம் லேண்டர் தடம் பதித்த பகுதிக்கு 'சிவசக்தி' என்று பிரதமர் மோடி பெயர் சூட்டினார்.

“சிவம்” மனித குல நன்மைகளுக்கான தீர்வு என்றும் “சக்தி” அந்த தீர்வுகளை செயற்படுத்துவதற்குரிய ஆற்றலையும் வழங்குவதாக கூறி பிரதமர் மோடி “சிவசக்தி” எனும் பெயரை சூடினார்.

இந்நிலையில் பிரதமர் மோடி சூட்டிய சிவசக்தி பெயருக்கு சர்வேதேச விண்வெளி யூனியனின் கிரக அமைப்புகளுக்கான பெயரிடும் பணிக்குழு அங்கீகாரம் அளித்துள்ளது.

குறித்த இடம் விண்வெளி ஆராய்ச்சியாளர்களால் சிவசக்தி என்று அடையாளப்படுத்தப்படும் எனவும் இது இந்தியாவிற்கு மிகப் பெரிய அங்கீகாரம் என்றும் கருதப்படுகிறது.