அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு விளக்கமறியல்: நீதிமன்றம் உத்தரவு, ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம்

OruvanOruvan

கலால் கொள்கை தொடர்பான ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, அரவிந்த் கெஜ்ரிவால் ஏழு நாட்கள் அமலாக்க இயக்குனரக காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவால் இன்று டில்லியில் உள்ள ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன்போது அவரை தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், முதல்வரிடம் விசாரணை நடத்துவதற்கான முதல் கட்ட விசாரணையை விசாரணை அமைப்பு தொடங்கியுள்ளது.

எவ்வாறாயினும், கெஜ்ரிவால் முதலமைச்சராக நீடிப்பார் என்றும், சிறையில் இருந்து தனது கடமைகளை ஆற்றுவார் என்றும் ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

இதனிடையே, கெஜ்ரிவாலின் கைதை கண்டித்து டில்லி ஐடிஓவில் ஆம் ஆத்மி கட்சியினர் தங்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போராட்டத்தையும் அடக்குவதற்கு துணை இராணுவப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

டில்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்திற்கு செல்லும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டுள்ளன.

இந்த கைது நடவடிக்கையை தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சி மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் வார்த்தைப் போரில் ஈடுபட்டுள்ளனர்.

நீதிமன்ற விசாரணையின் போது, கலால் கொள்கை வழக்கில் கெஜ்ரிவால் முக்கிய குற்றவாளி என அமலாக்க இயக்குனரகம் குற்றம் சுமத்தியது.

கலால் கொள்கையை உருவாக்குவதில் கெஜ்ரிவால் நேரடியாக ஈடுபட்டுள்ளதாகவும் அமலாக்க இயக்குனரகம் கூறியுள்ளது.

விசாரணை ஆணையத்தின் 12 பேர் கொண்ட குழு வியாழக்கிழமை இரவு கெஜ்ரிவாலை கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.