15 வயது சிறுவனால் 3 வயது சிறுமி பாலியல் துஷ்ப்பிரயோகம்!: சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபகரமாக உயிரிழப்பு
இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் 15 வயது சிறுவன் மூன்று வயது சிறுமியை பாலியல் துஷ்ப்பிரயோகம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், குறித்த சம்பவத்தில் தீவிரமாக பாதிப்படைந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
குறித்த சிறுவனின் வீட்டில் உயிரிழந்த சிறுமியும் அவரது தாயும் கடந்த சில மாதங்களாக வாடகைக்கு குடியமர்ந்துள்ளனர்.
இந்நிலையில், வீட்டில் சிறுமியின் தாய் இல்லாத நேரத்தில் குறித்த சிறுமியை தனது வீட்டு கழிவறைக்குள் வைத்து பூட்டி வைத்து, உடல் ரீதியாக பல சித்திரவதைகள் செய்து பாலியல் துஷ்ப்பிரயோகம் செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தின் போது சிறுமியின் அலுகுரல் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் சிறுமியை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்ததுடன், சிறுவனை பொலிஸில் பிடித்து கொடுத்துள்ளனர்.
இதன்போது, பாதிப்பட்ட சிறுமியின் உடலில் கடித்த காயங்களும், இரத்த காயங்களும் இருந்துள்ளதுடன் பாலியல் துஷ்ப்பிரயோகம் செய்துள்ளமையும் தெரியவந்துள்ளது.
சிறுமியின் பெற்றோரின் புகாரின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டம் 1860-ன் கீழ் கொலை மற்றும் கற்பழிப்பு மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (போக்சோ) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், குறித்த சம்பவத்தின் திருப்புமுனையாக ஆதாரத்தை மறைத்ததற்காக சிறுவனின் மாமாவும் கைது செய்யப்பட்டுள்ளார்.
உள்ளூர் காவல் நிலையத்தில் ஏராளமானோர் திரண்டு குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராடி வருகின்றனர்.
சிறுவர் நீதிச் சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறுவன் சீர்திருத்த இல்லத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக அப்பகுதி பொலிஸார் பொதுமக்களுக்கு விளக்கமளித்துள்ளனர்.