அமலாக்கத் துறையின் நடவடிக்கைகளுக்கு அஞ்சும் எதிர்க்கட்சிகள்: கனவுகளைத் தாண்டி உறுதியளிக்கும் பிரதமர் மோடி

OruvanOruvan

Narendra Modi - Prime Minister of India

ஊழலுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் அமலாக்கத்துறைக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகள் அமலாக்கத்துறையினர் மீது கூறிவரும் குற்றச்சாட்டுகளுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பதிலடி கொடுத்தார்.

புதுடில்லியில் இந்தியா டுடே கருத்தரங்கில் கருத்துரைத்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த இந்தியப் பிரதமர்,

“2014ஆம் ஆண்டு தாம் ஆட்சிக்கு வருவதற்கு முன் அமலாக்கத்துறை பொருளாதார குற்றவழக்குகளை விசாரித்து வந்தது. கடந்த ஆட்சிகளில் மொத்தமாக 1800 வழக்குகள் மாத்திரம் பதிவானது. 5000 கோடி ரூபா பறிமுதல் செய்யப்பட்டது. தாம் ஆட்சிப் பொறுப்பேற்ற 10 ஆண்டுகளில் 4700 வழக்குகள் பதிவானது. சுமார் 1 லட்சம் கோடி ரூபா பறிமுதல் செய்யப்பட்டது.

தீவிரவாத நிதித்திரட்டல், சைபர் குற்றங்கள், போதைப் பொருள் கடத்தல் , குற்றங்கள் தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஊழல் செய்தவர்களை புலனாய்வு அமைப்புகள் கண்காணிக்கும்.

தேர்தல் விரைவில் நெருங்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் காகிதத்தில் கணக்கிட்டு பகல் கனவு காண்கிறார்கள். ஆனால், மோடி கனவுகளைத் தாண்டி உறுதி அளித்து வருகிறேன்.

இம்முறை மக்கள் யாருக்கு வாக்களிக்கிறார்கள் என்பது விரைவில் தெரியும். அப்போது உங்கள் கனவுகளும் கலைந்துவிடும்” என கூறியுள்ளார்.

அமலாக்கத் துறை போன்ற புலனாய்வு அமைப்புகள் மத்திய அரசின் கைப்பாவையாக இருப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்தும் விமர்சித்து வரும் நிலையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அமலாக்கத் துறையை பாராட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.