இலங்கையில் தமிழ் மீனவர்கள் கைதுசெய்யப்பட யார் காரணம்?: திமுக, காங்கிரஸ் மீது மோடி குற்றச்சாட்டு

OruvanOruvan

ஜல்லிக்கட்டுக்கு தடை ஏற்பட்ட போது திமுகவும், காங்கிரசும் வாயை மூடிக்கொண்டு இருந்தனர். தேசிய ஜனநாயக கூட்டணிதான் ஜல்லிக்கட்டை மீண்டும் கொண்டு வந்தது என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

கன்னியாகுமரியில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பாரதிய ஜனதா கட்சியின் பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே மோடி இவ்வாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய மோடி,

”தி.மு.க. தமிழ்நாட்டின் வருங்கால, கடந்த கால வாழ்க்கைக்கும், வளர்ச்சிக்கும் எதிரி. அயோத்தி ராமல் கோயில் விழாவை தொலைக்காட்சியில் மக்களை பார்க்க கூட தி.மு.க. அரசு தடை விதித்தது.

புதிய பாராளுமன்ற கட்டடத்தில் நாங்கள் தமிழகத்தின் பாரம்பரியமான செங்கோலை நிறுவினோம். அதனையும் திமுக எதிர்த்தது.

ஜல்லிக்கட்டுக்கு தடை ஏற்பட்ட போது திமுகவும், காங்கிரஸும் வாயை மூடிக்கொண்டு இருந்தனர். தேசிய ஜனநாயக கூட்டணிதான் ஜல்லிக்கட்டை மீண்டும் கொண்டு வந்தது. திமுக தமிழ்நாட்டிற்கும், தமிழ் பண்பாட்டிற்கும் எதிரியாகும்.

இலங்கையில் நமது மீனவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது. நாம் எடுத்த நடவடிக்கைகளால் மீனவர்கள் காப்பாற்றப்பட்டனர்.

மீனவர்கள் ஏன் இலங்கை அரசால் கைது செய்யப்படுகிறார்கள்? அதற்கு காரணம் யார்?. இந்தப் பாவத்தை செய்தது நீங்களோ, நானோ அல்ல. திமுகவும், காங்கிரஸும்தான்.

இந்த பாவச் செயலுக்கான கணக்கை அவர்களிடம் கேட்கும் நேரம் வந்து விட்டது. கேட்பீர்களா..? காங்கிரஸ், திமுக செய்த பாவங்களுக்கான பலனை அனுபவிப்பார்கள்.” என்றார்.