CAA இந்திய முஸ்லிம்களின் குடியுரிமை மீது தாக்கம் செலுத்துமா?: சட்டத்தை மறுக்கும் மாநிலங்கள்

OruvanOruvan

Indian Muslims

இந்திய மத்திய அரசினால் குடியுரிமை திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத மதப் பிரிவினருக்குக் குடியுரிமை வழங்குவதற்கு வழிவகை செய்யும் வகையிலேயே இத்திருந்தச் சட்டம் உருவாக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த சட்டம் இந்திய முஸ்லிம்களை எவ்விதத்திலும் பாதிக்காது என இந்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

“இந்திய முஸ்லிம்கள் கவலைப்படத் தேவையில்லை. குடியுரிமை திருத்தச் சட்டம் அவர்களின் குடியுரிமையை பாதிக்காது. இந்த சட்டத்திற்கும், இந்திய முஸ்லிம்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. இவர்களுக்கும் மற்ற மதத்தினரை போல் சம உரிமை உண்டு” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) நேற்று முன்தினம் அமலுக்கு வந்தது. பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தானில் மதரீதியாக துன்புறுத்தப்பட்டு கடந்த 2014 டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்பு இந்தியாவில் தஞ்சமடைந்த இந்து, சீக்கிய, சமண, புத்த, பார்சி, கிறிஸ்தவ சமூகங்களை சேர்ந்த சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கப்பட உள்ளது.

குடியுரிமைக்கு விண்ணப்பிக்க புதிய இணையத்தளம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக மாநில அரசுகள் செயற்படுவது சாத்தியமா?

மத்திய அரசு அமுல்படுத்தியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தின் விதிகள் தமிழகத்தில் அமல்படுத்தப்படாது. இது இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. இதை நடைமுறைப்படுத்த எந்த வகையிலும் தமிழக அரசு இடமளிக்காது என நேற்றைய தினம் தமிழ முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதேவேளை கேரளா, மேற்குவங்க அரசுகளும் இச்சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

குடியுரிமை வழங்குதல் என்பது மத்திய அரசின் அதிகார வரம்பின் கீழ் வருவதால் இதில் மாநில அரசின் நிலைப்பாடு என எதுவும் இருக்க முடியாது. மாநில அரசுகள் இதனை அமுலாகவிடாமல் தடுக்கவும் முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் இந்திய நாளிதழ் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த குடியுரிமை சட்டத்திற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரிகளின், நடைமுறைகளில் மாநில அரசுக்கு என தனி அதிகாரம் ஏதும் இருக்காது என்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.