பெண்மீது கொண்ட மோகம்: பாகிஸ்தானுக்கு உளவுபார்த்த இந்தியர்

OruvanOruvan

பாகிஸ்தானுக்கு உளவுபார்த்ததாகக் கூறி மும்பையிலுள்ள மசகான் கப்பல் பட்டறை அதிகாரி ஒருவரை மகாராஷ்டிர மாநில பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு கைதுசெய்துள்ளது.

கல்பேஷ் பைக்கர், 31, என்ற அந்த ஆடவர் பாகிஸ்தானை மையமாகக் கொண்டு செயல்படும் ஓர் அமைப்பிடம் ரகசியத் தகவலைப் பகிர்ந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

பெண்ணைக் கொண்டு விரித்த வலையில் சிக்கிய கல்பேஷ், பின்னர் ரகசியத் தகவலைப் பகிரும்படி மிரட்டப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாகிஸ்தானிய பெண் உளவாளி ஒருவர் சமூக ஊடகம் வழியாக கல்பேஷுடன் நட்பாகப் பழகியதாகவும் இருவருக்கும் இடையே கடந்த நான்கு மாதங்களாகத் தொடர்பு இருந்ததாகவும் கூறப்பட்டது.

ரகசியத் தகவலைப் பகிர்ந்துகொண்டமைக்காக கல்பேஷ் பணம் பெற்றதாகவும் அதிகாரிகள் கூறினர். இதுபற்றித் தங்களுக்கு ரகசியத் தகவல் கிடைத்ததாகப் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு தெரிவித்தது.

“கல்பேஷிடம் விசாரித்தபோது, அவர் கடந்த 2021 நவம்பர் - 2023 மே மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் வழியாக அந்தப் பாகிஸ்தானியப் பெண்ணுடன் அறிமுகமானது கண்டுபிடிக்கப்பட்டது,” என்று பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதனையடுத்து, கல்பேஷ் மீதும் அவர் ரகசியத் தகவலை வழங்கியதாகக் கூறப்படும் பாகிஸ்தான் உளவாளி மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது.

கல்பேஷ் எத்தகைய தகவலைப் பகிர்ந்துகொண்டார் என்பது பற்றிய விவரம் வெளியிடப்படவில்லை.