நீரில் மூழ்கி துவாரகா நகருக்குச் சென்ற மோடி: கிருஷ்ணருக்கு மயிலிறகு வைத்து வழிபாடு

OruvanOruvan

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை குஜராத்தில் அமைந்துள்ள துவாரகாவில் உள்ள துவாரகாதீஷ் கோவிலில் ஆழமான நீரில் மூழ்கி பிரார்த்தனை செய்துள்ளார்.

இதனை ஒரு "தெய்வீக அனுபவம்" என்று கூறிய பிரதமர் மோடி, "ஆன்மீக மகத்துவம் பண்டைய சகாப்தத்துடன் இணைந்திருப்பதை" உணர்ந்ததாக கூறியுள்ளார்.

"தண்ணீரில் மூழ்கியிருக்கும் துவாரகா நகரத்தில் பிரார்த்தனை செய்வது மிகவும் தெய்வீகமான அனுபவமாக இருந்தது. ஆன்மீக மகத்துவம் மற்றும் காலத்தால் அழியாத பக்தி கொண்ட ஒரு பழங்கால சகாப்தத்துடன் இணைந்திருப்பதை உணர்ந்தேன்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நம் அனைவரையும் ஆசீர்வதிக்கட்டும்" என்று அவர் தனது எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளார்.

அத்துடன், பிரத்தியேக ஆடையுடன் நீருக்கு அடியில் சென்று வழிப்பட்ட படங்களையும் பிரதமர் வெளியிட்டுள்ளார்.

இந்து மத நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள துவாரகா நகரம், கிருஷ்ணரால் ஆளப்பட்டதாக நம்பப்படுகிறது. இந்து நம்பிக்கையின்படி, கிருஷ்ணர் பூமியை விட்டு வெளியேறிய பின்னர் இறுதியில் கடலால் விழுங்கப்பட்டது.

"இன்று, அந்த தருணங்கள் என்னுடன் என்றும் நிலைத்திருக்கும். நான் நீரின் ஆழத்திற்குச் சென்று பண்டைய துவாரகா நகரத்தை 'தரிசனம்' செய்தேன்.

நீருக்கடியில் மறைந்திருக்கும் துவாரகா நகரத்தைப் பற்றி தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் நிறைய எழுதியுள்ளனர்.

நமது சாஸ்திரங்களிலும், துவாரகாவை பற்றி கூறப்பட்டுள்ளது. அழகிய வாயில்கள் மற்றும் உயரமான கட்டிடங்கள் கொண்ட நகரம், உலகின் உச்சியைப் போல் உயரமானது" என்று துவாரகா தரிசனத்திற்குப் பிறகு உரையாற்றிய பிரதமர் மோடி கூறினார்.

“நீரில் ஆழமாகச் சென்றபோது, தெய்வீகத்தை உணர்ந்தேன்.. துவாரகாதீஷின் முன் பணிந்து, மயில் தோகை எடுத்து கிருஷ்ணரின் பாதத்தில் வைத்தேன்.

அங்குச் செல்ல வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு எப்போதும் உண்டு. நான் இன்று உணர்ச்சிகளால் நிரம்பியிருக்கிறேன்... பல தசாப்த கால கனவு இன்று நிறைவேறியது," என்று அவர் மேலும் கூறினார்.