சூடுபிடித்துள்ள தமிழக தேர்தல் களம்: திராவிடக் கட்சிகளுக்கு சவாலாக மாறும் நாம் தமிழர்

OruvanOruvan

உலகில் மிகப்பெரிய ஜனாநாயக நாடாக கருதப்படும் இந்தியாவில் அடுத்த இரண்டு மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.

இதற்காக இந்திய தேர்தல்கள் ஆணையம் தயார்ப்படுத்தல்களை மேற்கொண்டு வருவதாக அறிவிப்புகளை வெளியிட்டுள்ளதுடன், புதிய கட்சிகளுக்கான பதிவுகளும் கடந்த சில வாரங்களாக இடம்பெற்று வருகின்றன.

பா.ஜ.க, காங்கிரஸ் தலைமையில் பரந்தப்பட்ட கூட்டணி

தேர்தலை எதிர்கொள்ள பாரதிய ஜனதாக் கட்சித் தலைமையிலான பரந்தப்பட்ட கூட்டயொன்று அமைக்கப்பட்டு வருவதுடன், காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டணியொன்றும் உருவாக்கப்படுவதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன.

தேசிய மட்டத்தில் பரந்தப்பட்ட கூட்டணிகள் அமைக்கப்பட்டுவரும் பின்புலத்தில் தமிழ்நாட்டிலும் கூட்டணிகளை அமைக்கும் பேச்சுவார்த்தைகள் களைகட்டியுள்ளன.

தமிழகத்தை பொருத்தமட்டில் கடந்த 1972ஆம் ஆண்டு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உருவாக்கப்பட்டது முதல் அ.தி.மு.க., தி.முக. தலைமையிலான இரண்டு கூட்டணிகள் உருவாக்கப்படுவதும் இந்த இரண்டு கூட்டணிகளும் பா.ஜ.க. அல்லது காங்கிரஸுடன் கூட்டணி வைப்பது வாடிக்கையாக இருந்து வருகிறது.

தமிழகத்தில் நான்கு முனை போட்டி

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் 39 தொகுதிகளை தி.மு.க வெற்றிக்கொண்டதுடன், அ.தி.மு.க 1 தொகுதிகளை மாத்திரமே வெற்றிக்கொண்டது. தேனி பாராளுமன்ற தொகுதியில் மட்டுமே அ.தி.மு.க. வெற்றி பெற்றது.

இம்முறை தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன. கடந்த தேர்தலிலும் இதே கூட்டணியே போட்டியிட்டது.

தி.மு.க. தலைமையிலான இந்த அணி பலம் வாய்ந்த அணியாகவே பார்க்கப்படுகிறது. வருகிற நாடாளுமன்ற தேர்தலிலும் இந்த கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு இருப்பதாகவே கணிக்கப்பட்டு வருகிறது.

மற்ற மாநிலங்களில் இந்தியா கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் அந்த கூட்டணி கட்டுக்கோப்புடனேயே உள்ளது.

இதனால் நிச்சயம் இந்தியா கூட்டணி தமிழகத்தில் வெல்லும் என்றே அரசியல் நோக்கர்கள் கூறியுள்ளனர். இப்படி பலம் வாய்ந்ததாக கருதப்படும் தி.மு.க. கூட்டணிக்கு எதிராக மெகா கூட்டணியை உருவாக்க அ.தி.மு.க. திட்டமிட்டுள்ளது.

அ.தி.மு.க வகுத்துள்ள வியூகம்

தமிழகத்தில் பா.ஜ.க .புதிய கூட்டணி ஒன்றை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. பா.ஜ.கவுடன் ஏற்பட்ட முறுகல்கள் காரணமாக கடந்த ஆண்டு அ.தி.மு.க. அக்கூட்டணியில் இருந்து விலகியது.

நாம் தமிழர் கட்சி இம்முறையும் தனித்தே போட்டியிடும் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனான் அறிவித்துள்ளதுடன், வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் பிரமாண்ட மாநாட்டுக்கான ஏற்பாடுகளையும் செய்து வருகிறார். தமிழகத்தில் இம்முறை நான்கு முனை போட்டி ஏற்பட வாய்ப்புள்ளது.

தி.மு.க. கூட்டணிக்கு எதிராக பலம் வாய்ந்த புதிய கூட்டணியை உருவாக்க அ.தி.மு.க. பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமி காய் நகர்த்தி வருகிறார்.

பாரதிய ஜனதாவுடனான கூட்டணியை உதறிவிட்டு வெளியேறியுள்ள அ.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகளோடு சேர்ந்து கூட்டணி அமைப்பதற்கான வேலைகளை தீவிரப்படுத்தி உள்ளது.

இதுபோன்று ஒரு கூட்டணியை ஏற்படுத்தி விட்டால் நிச்சயம் தி.மு.க. கூட்டணிக்கு கடும் போட்டியை ஏற்படுத்தி வெற்றி பெற்று விடலாம் என்று அக்கட்சி கணக்கு போட்டுள்ளது.

பாரதிய ஜனதா அரசுக்கு எதிராக பிரசார வியூகத்தை மேற் கொள்ள தி.மு.க. திட்டமிட்டு உள்ளது. தி.மு.க. அரசின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வரும் அ.தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளையும் தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை என்று குற்றம்சாட்டி வருகிறது.

தேர்தல் களத்தில் இதையே அ.தி.மு.க. பெரிய பிரசாரமாக மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

பா.ம.க., தே.மு.தி.க. ஆகிய 2 கட்சிகளுக்கு பாரதிய ஜனதா கட்சி வலை விரித்துள்ளது. ஆனால், அது எந்த அளவுக்கு கைகொடுக்கும் என்பது தெரியவில்லை. ஒரு வேளை இந்த முயற்சி கைகூடாவிட்டால் சிறிய கட்சிகளோடு கூட்டணி அமைத்து தங்களது பலம் என்ன? என்பதை நிரூபிக்க பாரதிய ஜனதா கட்சி முடிவு செய்துள்ளது.

இதனால் பாராளுமன்ற தேர்தல் களத்தில் பாரதிய ஜனதா கட்சி 2 திராவிட கட்சிகளுக்கும் எதிராக என்ன செய்யப் போகிறது? என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

திராவிடக் கட்சிகளுக்கு சவாலாக மாறும் நாம் தமிழர்

நாம் தமிழர் கட்சி நாடாளுமன்ற தேர்தலை தனித்தே சந்திக்க உள்ளது. தமிழகம் புதுவையில் 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் 20 பெண் வேட்பாளர்களையும் அந்த கட்சி களம் இறக்குகிறது.

நாம் தமிழர் கட்சியை பொறுத்த வரையில் ஒவ்வொரு தேர்தலிலும் அந்த கட்சியின் வாக்கு சதவீதம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த தேர்தலில் நிச்சயம் மற்ற கட்சிகள் வியந்து பார்க்கும் அளவுக்கு இதுவரை இல்லாத வகையில் வாக்குகளை பெறுவோம் என்று நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இப்படி தமிழக தேர்தல் களத்தில் நான்கு முனை போட்டி உருவாகி இருப்பதன் மூலம் வாக்குகள் சிதறுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கணிக்கப்பட்டு உள்ளது.

தேர்தல் களத்தில் பாரதிய ஜனதா கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவை பிரிக்கும் ஓட்டுகள் இரண்டு திராவிட கட்சிகளுக்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்றே கூறப்படுகிறது.

விஜயின் கட்சி தாக்கத்தை ஏற்படுத்துமா?

இதேவேளை, அண்மையில் நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள அரசியல் கட்சியால் தமிழகத்தில் பெரும் எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் இந்த கட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. என்றாலும், 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில்தான் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிட உள்ளதாக நடிகர் விஜய் அறிவித்துள்ளார்.

ஆனால், நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கு அவர் ஆதரவை வழங்குவார் என்ற எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாததால் அந்த வாக்குகளை தமது பக்கம் ஈர்க்கும் முயற்சியில் பல தரப்பினரும் ஈடுபட்டுள்ளனர்.

வெற்றிக் கழகத்துக்கு ஆதரவான குரலை கொடுத்துவரும் சீமானுக்கு குறிப்பிடத்தக்க அளவு விஜயின் ரசிகர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க வாய்ப்புள்ளதாக தமிழக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எது எவ்வாறாயினும் அடுத்த இரண்டு மாதங்களில் நடைபெற உள்ள இந்தியாவின் நாடாளுமன்றத் தேர்தல் மீதே முழு உலகமும் உண்ணிப்பாக அவதானம் செலுத்தியுள்ளது.

சு.நிஷாந்தன்