அமெரிக்காவில் குறிவைக்கப்படும் தெற்காசிய மாணவர்கள்: இரு வாரங்களில் ஐவர் படுகொலை

OruvanOruvan

Image of Purdue University student Sameer Kamath

அமெரிக்காவில் அண்மைக்காலமாக இந்திய வம்சாவளி மாணவர்கள் மீதான படுகொலை மற்றும் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

அந்த வகையில் கடந்த இரு வாரங்களில் 5 மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன், ஒருவர் மீது உயிர் ஆபத்து ஏற்படும் வகையில் கடும் தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளது.

23 வயதான சமீர் காமத் சடலமாக மீட்பு

அமெரிக்காவின் இந்தியானாவில் அமைந்துள்ள பர்டூ பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் இந்திய வம்சாவளி மாணவர் ஒருவர் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இயற்கை பாதுகாப்பில் உள்ள காடுகளில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

23 வயதான சமீர் காமத் என்ற அமெரிக்க குடியுரிமை பெற்ற இயந்திர பொறியியலில் முதுகலைப் பட்டம் முடித்த மாணவர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் ஆவர்.

இந்திய-அமெரிக்க மாணவர் மரணம் தொடர்பான செய்திக்குறிப்பை அதிகாரிகள் நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டனர்.

உயிரிழந்த சமீர் காமத், Massachusetts Amherst என்ற பல்கலைக்கழத்தில் இயந்திர பொறியியலில் பட்டம் பெற்றவர் மற்றும் 2021 இல் பர்டூ பல்கலைக்கழகத்தில் மேலதிக கல்வி நடவடிக்கையை ஆரம்பித்திருந்தார்.

நால்வர் படுகொலை ; ஒருவர் காயம்

இந்திய மாணவர் சையத் மசாஹிர் அலியின் காணொளி நேற்று புதன்கிழமை வெளிவந்தது, அதில் அவர் கொள்ளையர்களால் தாக்கப்பட்ட பின்னர் சிகாகோவில் அதிக இரத்தப்போக்குடன் உதவிக்காக கெஞ்சுவது வெளிப்பட்டது.

அண்மைய நாட்களில் பதிவானது இந்தியா மாணவர்கள் மீதான ஆறாவது தாக்குதல் சம்பவம் இதுவாகும்.

முன்னதாக, அமெரிக்க கடவுச்சீட்டை வைத்திருந்த 19 வயதான இந்திய மாணவர் ஷ்ரேயாஸ் ரெட்டி பெனிகர் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.

இந்த வாரத்தின் தொடக்கத்தில் இந்திய மாணவரான நீல் ஆச்சாரியா, பர்டூ பல்கலை வளாகத்தில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.

அவரைக் காணவில்லை, கண்டுபிடிக்க உதவுங்கள் என மாணவரின் தாயார் வேண்டுகோள்விடுத்த அடுத்த நாள் இத்துயரச் சம்பவம் நடந்தது.

ஜனவரி 16 ஆம் திகதி ஹரியானாவைச் சேர்ந்த விவேக் சைனி என்ற 25 வயது மாணவர் ஜார்ஜியாவின் லிதோனியாவில் வீடில்லாத ஒருவரால் சுத்தியலால் அடித்துக் கொல்லப்பட்டார்.

அதே மாதம் இல்லினோய்ஸ் அர்பானா சாம்பெய்ன் பல்கலைக்கழகத்துக்கு வெளியே மற்றொரு இந்திய மாணவரான அகுல் தவான் இறந்து கிடந்தார்.