அதானிக்கு எதிராக மக்கள் எழுச்சி ; ஏரியும் கடலும் இணையும் சாத்தியம்: விளம்பரத்திற்காக மக்கள் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன

OruvanOruvan

Adani Ports

உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான கௌதம் அதானிக்கு சொந்தமான துறைமுகத்தை விரிவுபடுத்தும் திட்டத்திற்கு எதிராக இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள ஆயிரக்கணக்கான பொது மக்கள் போராடி வருகின்றனர்.

வங்காள விரிகுடாவின் கரையோரத்தை அண்மித்து திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள காட்டுப்பள்ளி பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் துறைமுக விரிவாக்கமானது தமது நிலங்களை நீரில் மூழ்கடித்து வாழ்வாதாரத்தை நாசமாகிவிடும் என பெரும்பாலான கிராமவாசிகள் தெரிவித்துள்ளனர்.

330 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படும் இந்த பல்நோக்கு துறைமுகம் முதலில் லார்சன் என்ட் டூப்ரோ (Larsen & Toubro) நிறுவனத்த்தால் உருவாக்கப்பட்டது. பின்னர் 2018 ஆம் ஆண்டு அதானி போர்ட்ஸ் (Adani Ports) நிறுவனம் குறித்த துறைமுகத்தை தனதாக்கிக்கொண்டது.

தொடர்ந்து துறைமுகத்தை 18 மடங்குக்கும் அதிகமாக 6,110 ஏக்கர் பரப்பளவில் விரிவுபடுத்துவதற்கு முன்மொழியப்பட்டது. நிறுவனத்தின் தீர்மானத்தின் படி துறைமுகத்தின் சரக்குத்திறனை வருடத்திற்கு 24.6 மெட்ரிக் தொன்னில் இருந்து 320 மெட்ரிக் தொன்னாக அதிகரித்து, புதிய இரயில் மற்றும் வீதி வலையமைப்புகளை உருவாக்கி குறித்த பகுதியில் வர்த்தக இணைப்பை அதிகரிப்பதற்கு திட்டமிடப்பட்டது.

இந்த நிலையிலே, கடலோரத்தை அண்மித்து வாழும் சுமார் 100 நகரங்கள் மற்றும் கிராமங்களில் உள்ள மீனவ சமூகத்தினர் தமது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்குமென அங்கலாய்கின்றனர்.

OruvanOruvan

''இங்கு காணப்படும் மீன் வகைகளின் எண்ணிக்கை ஏற்கனவே கணிசமானளவு குறைவடைந்துள்ளது. துறைமுக விரிவாக்க திட்டமானது இங்குள்ள மக்கள் தொகையினை மேலும் குறைக்கும்'' என மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

அதேநேரம், குறித்த திட்டமானது சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் எதிர்ப்பையும் சம்பாதித்துள்ளது. இந்த திட்டமானது பாரிய கடலரிப்பு மற்றும் பல்லுயிர் இழப்பு குறிப்பாக உள்நாட்டு மீன் இனங்கள் மற்றும் நண்டுகள், இறால்கள், ஆமைகள் அழிவதற்கு வழிவகுக்குமென சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த திட்டமானது இந்தியாவின் இரண்டாவது பெரிய உப்பு நீர் ஏரியான பழவேற்காடு ஏரியையும் (Pulicat lake) அழிவிற்குட்படுத்த முடியுமென சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறித்தப் பகுதியில் மேலும் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படும் நிலையில் கடற்கரையின் பரப்பளவு குறைவடைந்து ஏரியும் கடலும் இணைவதற்கான சாத்தியம் காணப்படுகிறது.

இந்த பின்னணியின் அதானி போர்ட்ஸ் நிறுவனம் குறித்த குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளது. அத்துடன், உள்ளூர் மக்கள் துறைமுக விரிவாக்கத்திற்கு எதிரானவர்கள் அல்ல எனவும், விளம்பரத்திற்காக தவறான நோக்கத்துடன் மக்கள் போராட்டங்கள் நடத்தப்படுவதாகவும் அதானி நிறுவனம் தெரிவித்துள்ளது.