சீட்டுகட்டு போல் சரிந்து விழுந்த 3 மாடி வீடு: கிரகபிரவேசத்துக்கு தயாரான நிலையில் சோகம்

OruvanOruvan

A 3 storey house collapsed

தமிழ்நாட்டின் புதுவை பிரதேசத்தில் புதிய வீடொன்றை கட்டி ஆசையாக கிரகப்பிரவேசம் செய்து குடியேற காத்திருந்த குடும்பத்தாருக்கு பேரிடியாய் நடந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுவை - ஜீவாநகர் பகுதியியை அண்டிய பகுதிகளில் காணப்படும் வாய்க்கால் கடல் பகுதி கழிவு நீர் குடியிருப்பு வழியாகத்தான் திறந்துவிடப்படுகின்றது.

இதனால், கடுமையான போக்குவரத்து நெரிசலையும் அன்றாடம் சந்திக்க வேண்டியுள்ளது. இதனால், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் இந்த வாய்க்காலில் மேம்பாலம் கட்டுமானப்பணி தொடங்கி நடந்து வந்தது.

அந்தவகையில், உப்பனாறு வாய்க்கால் ஓடும் ஆட்டுப்பட்டி பகுதியில் கடந்த சில நாட்களாக வீடுகளுக்கு அருகில் கரை பலப்படுத்தும் பணி நடந்து வந்தது.

இதனால் சிறிய அளவிலான வீடுகள் அதிகம் உள்ள இந்த பகுதியில் அதிர்வு ஏற்பட்டதை தொடர்ந்து அங்கு வசித்து வரும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஆனாலும், தொடர்ந்து பணிகள் நடந்து வந்தன. அந்த பகுதியில் சாவித்திரி என்பவர் புதிதாக கட்டி முடித்து குடிபுக தயாராக இருந்த 3 மாடி வீடு திடீரென்று விரிசல் ஏற்பட்டு நேற்று மதியம் சுமார் 2 மணியளவில் சரியத் தொடங்கியது.

இதைப்பார்த்ததும் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். அவர்களது கண் முன் அடுத்த சில நிமிடங்களில் 3 மாடி வீடு சீட்டு கட்டு போல் கழிவுநீர் வாய்க்காலில் 2 துண்டுகளாக சரிந்து விழுந்தது. இதைப்பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு பெரும் அதிர்ச்சியும் ஏற்பட்டது.

3 மாடி வீடு சரிந்து விழுந்த போது அந்த பகுதியில் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் உள்ளிட்ட அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படவில்லை.

எதிர்வரும் பெப்ரவிரி 11ஆம் திகதி கிரகப்பிரவேசம் நடத்த குடும்பத்தார் திட்டமிட்டு இருந்தனர். இதற்காக அழைப்பிதழ் தேர்வு செய்வதற்காக சென்று இருந்த நிலையில் தான் அந்த வீடு சரிந்து விழுந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

ஆசை ஆசையாக கட்டிய வீடு சரிந்து விழுந்த தகவலறிந்து சாவித்திரி மற்றும் அவரது உறவினர்கள் அங்கு ஓடி வந்து கட்டிடம் தரைமட்டமாகி கிடப்பது கண்டு கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.