சனத் நிஷாந்தவின் வாகனத்தில் மோதிய கார் யாருடையது?: பல கோணங்களில் பொலிஸார் விசாரணை

OruvanOruvan

Sanath Nishantha dead

நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணம் சமூக வலைத்தளங்களில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'சனத் நிஷாந்த'வின் மரணம் கொலையாக இருக்க வாய்ப்புள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸகுட்டி ஆராச்சி அண்மையில் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் கடந்த 25 ஆம் திகதி அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உள்ளிட்ட இருவர் உயிரிழந்தனர்.

இவரின் மரணம் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும், சமூக வலைத்தளங்களிலும் பல விமர்சனங்கள் பேசப்பட்டன.

இவருடைய மரணம் தொடர்பில் பல்வேறு கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதையடுத்து தற்போது ஒரு புதிய விடயம் புலனாகியுள்ளது.

அதாவது, சனத் நிஷாந்தவின் ஜீப் வண்டி விபத்துக்குள்ளான போது அவரின் காரை பிறிதொரு கார், முந்திச்செல்ல முற்பட்டதாகவும் அதனால் தான் குறித்த விபத்து இடம்பெற்றதாகவும் பொலிஸார் தற்போது தகவல் வெளியிட்டுள்ளனர்.

பாரவூர்தியுடன் மோதிய ஜீப் வண்டி

முன்னதாக பாரவூர்தியுடன் ஜீப் வண்டி மோதுண்டதினால் விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.

தற்போது விபத்து ஏற்படுவதற்கு காரணம் என சந்தேகிக்கப்படும் கார் குறித்தும் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

OruvanOruvan

பாரவூர்தி சாரதியின் வாக்குமூலம்

குறித்த விபத்தில் இராஜாங்க அமைச்சரின் ஜீப் வண்டியுடன் மோதிய பாரவூர்தியின் சாரதி தெரிவித்ததன் அடிப்படையில், தான் ஒரு காரை பார்த்ததாகவும் அந்த கார் சுமார் 140 கிலோமீற்றர் வேகத்தில் சென்றிருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஜீப் வண்டியும் அடையாளம் காணப்படாத அந்த காரும் போட்டித்தன்மையில் வந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்போது, ஆபத்தான முறையில் அவர்கள் வாகனம் செலுத்துவதை அவதானித்த பாரவூர்தியின் சாரதி பாதையில் இடது பக்கமாக செல்ல முயற்சித்ததாகவும் தெரிவித்தார்.

சாரதியின் கருத்துக்களின் அடிப்படையில், மூன்றாவதாக வந்த காரும் பாரவூர்தியை மோதியுள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மேலும், அந்த கார் தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளதாகவும், அந்த கார் தொடர்பான சிசிடிவி காட்சிகளை பரிசோதனை செய்யுமாறு நெடுஞ்சாலைகள் பாதுகாப்பு பொலிஸாருக்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வாக்குமூலங்களின் மீது நம்பிக்கையின்மை

இரண்டு வாகனங்களின் சாரதிகளுமே அந்த மூன்றாவது வாகனம் தொடர்பான விடயங்களை வெளியிட்டுள்ளனர்.

இவர்களின் வாக்குமூலங்களை முழுமையாக நம்பமுடியாது.

ஆனாலும், அவற்றை ஒரு ஆதாரமாக வைத்துக்கொண்டு தான் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

விரைவில் இந்த சம்பவம் தொடர்பான உண்மைகள் கண்டறியப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.