யாழ்ப்பாணத்தில் விசித்திர விளையாட்டு இல்லம்: பொறுப்பற்ற சாரதிகளால் பலியாகும் உயிர்கள்
இலங்கையர்களின் ஒட்டுமொத்த கவனத்தினையும் திசை திருப்பிய சம்பவமாக யாழ்ப்பாணம் - நடேஸ்வரா கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி அமைந்துவிட்டது.
இக் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி நேற்றுமுன்தினம் புதன்கிழமை அதிபர் பா.பாலகுமார் தலைமையில் இடம்பெற்றது.
பாரதி, வள்ளுவர், கம்பர் என மூன்று இல்லங்கள் வகைப்படுத்தப்பட்டு போட்டிகள் இடம்பெற்றது.
சிந்திக்க வைத்த பாரதி இல்லம்
இதில் பாரதி இல்லம் 696 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தை தனதாக்கிக் கொண்டது.
இந்த வெற்றிக்கு அவர்களின் இல்லத்தின் அலங்கரிப்பும் ஓர் காரணியாகும்.
இல்ல அலங்கரிப்பில் இலங்கை போக்குவரத்து சபையினரின் பொறுப்பற்ற செயல்பாடுகளினால் ஏற்படும் விபத்தினை தத்துரூபமாக காட்டியிருந்தனர்.
பாரதி இல்லம் இந்த இல்லத்தினை வடிவமைத்து முதலாம் இடத்தை தனதாக்கிக் கொண்டது.
அரச பேருந்து ஒன்று விபத்துக்குள்ளான மாதிரியை அலங்கரித்து அனைத்து பார்வையாளர்களையும் கவர்ந்து ஈர்த்ததுடன், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் அமைந்திருந்தது.
காங்கேசன்துறை– யாழ்ப்பாணம் 769 வழித்தடங்களில் பயணிக்கும் அரச பேருந்து ஒன்று நடைபாதையில் மாணவர் ஒருவரை மோதி தள்ளுவதை சித்தரிக்கும் முகமாக இல்லம் அமைக்கப்பட்டுள்ளது.
பொறுப்பற்ற சாரதிகளால் பலியாகும் உயிர்கள்
பொறுப்பற்ற சாரதிகளால் இவ் விபத்துக்கள் இடம்பெறுவதை மாணவர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.
இலங்கையில் வீதி விபத்துக்களினால் உயிர் இழப்புகள் அண்மைக்காலமாக அதிகரித்திருப்பதை கடந்த சில நாட்களில் ஏற்பட்ட விபத்துச் சம்பவங்கள் படம்பிடித்து காட்டுகின்றன.
இதனால் நாளொன்றுக்கு சராசரியாக 05 நபருக்கு மேற்பட்டவர்கள் உயிரிழப்பதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றது.
சாரதியின் கவன குறைவே பெரும்பாலும், வீதி விபத்துக்கு முக்கிய காரணமாக அமைகின்றது.
சாரதிகள் விழிப்பாக இருக்க வேண்டிய ஒரு நேரம் இதுவாகும் என்பதை வித்தியாசமாக எடுத்துக்காட்டிய யாழ்ப்பாணம் நடேஸ்வரா கல்லூரியின் பாரதி இல்லத்திற்கு மக்கள் மத்தியில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.