இலங்கையை அலங்கரிக்கும் கண்கவர் நீர்வீழ்ச்சிகள்: ஒரு தொகுப்பு

OruvanOruvan

Srilankan Waterfalls

இயற்கையின் கொடைகளில் ஒன்று நீர்வீழ்ச்சி. ஆறு போன்ற நீரோட்டமானது, சடுதியான நிலமட்ட வேறுபாட்டைக் கொண்ட, அரிப்புக்கு உட்படாத பாறை அமைப்புக்களில் மேல் மட்டத்திலிருந்து கீழ் மட்டத்துக்கு விழுவதால் உண்டாகும் நிலவியல் அமைப்பே நீர்வீழ்ச்சியாகும்.

நீர்வீழ்ச்சியின் சரியான தமிழ் பதம் அருவி.

இனி இலங்கையில் உள்ள முக்கிய நீர்வீழ்ச்சிகள் குறித்து பார்ப்போம்.

இராவணன் நீர்வீழ்ச்சி

OruvanOruvan

Raavana Waterfalls

ஊவா மாகாணத்தில், கிரிந்தி ஓயாவுக்கு அண்மையில் அமைந்துள்ளது இந்த நீர்வீழ்ச்சி. இது எல்ல - வெல்லவாய பெருந்தெருவுக்கு அருகில் அமைந்துள்ளது. இந்த நீர்வீழ்ச்சிக்குப் பின்னால் உள்ள குகையில்தான் இராவணன் சீதையை சிறை வைத்திருந்தார் என்று புராண கதைகள் கூறுகின்றன. இதன் உயரம் 49 மீட்டர். மேலும் இந்த நீர்வீழ்ச்சியானது சுண்ணாம்புக்கல் பாறையில் அமைந்துள்ளது.

பம்பரக்கந்த நீர்வீழ்ச்சி

OruvanOruvan

Bambarakanda Waterfalls

ஊவா மாகாணத்தில் கொழும்பு - பண்டாரவளை பெருந்தெருவிலிருந்து சுமார் 6 கிலோமீட்டர் தொலைவிலுள்ள காட்டில் அமைந்துள்ளது இந்த நீர்வீழ்ச்சி. இதுதான் இலங்கையின் மிக உயரமான நீர்வீழ்ச்சியாகும். சுமார் 263 மீட்டர் பாய்ச்சலைக் கொண்டது. இதன் தண்ணீரானது பாறையிலிருந்து மெல்லிய தண்டு போல் விழுகிறது. மேலும் இந்த நீர்வீழ்ச்சியானது குதிரைவால் வகையினைச் சேர்ந்தது. உலகளவில் நீர்வீழ்ச்சிகளின் தரவரிசையில் இது 297ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

லக்சபான நீர்வீழ்ச்சி

OruvanOruvan

Lakshapana Waterfalls

இந்த நீர்வீழ்ச்சியானது மத்திய மாகாணத்தின்,நுவரெலியா மாவட்டத்தில், ஹட்டன் நகரில் அமைந்துள்ளது. மஸ்கெலியா ஓயா, கெஹெல்கமுவை ஓயா சங்கமிக்கும் இடத்துக்கு அருகில் மஸ்கெலியா ஓயா பெருக்கெடுத்து பள்ளத்தாக்கை நோக்கிப் பாய்வதனூடாக இந்த நீர்வீழ்ச்சி தோன்றியுள்ளது. சுமார் 126 மீட்டர் உயரம் கொண்ட இந்த நீர்வீழ்ச்சி, இலங்கையிலுள்ள 8 ஆவது பெரிய நீர்வீழ்ச்சியும் உலகளாவிய ரீதியில் 625ஆவது இடத்தை பிடித்த நீர்வீழ்ச்சியுமாகும்.

தியலும நீர்வீழ்ச்சி

OruvanOruvan

Diyaluma Waterfalls

ஊவா மாகாணத்தில் கிரிந்தி ஆற்றின் கிளையாறான புங்கள ஆற்றில் அமைந்துள்ள ஒரு நீர்வீழ்ச்சியாகும். இது கொழும்பு - கல்முனை பெருந்தெருவில் கொஸ்லந்தைக்கும் வெல்லவாயுவுக்கும் இடையில் அமைந்துள்ளது. சுமார் 220 மீட்டர் பாய்ச்சல் கொண்ட இந்த நீர்வீழச்சியானது இலங்கையின் 2ஆவது உயரமான நீர்வீழ்ச்சியாக உள்ளது. உலகளவில் 360ஆவது இடத்தை பிடித்துள்ளது. இந்த நீர்வீழ்ச்சியானது உலர் வலயத்தில் இருந்தாலும் இதன் நீரூற்றுக்கள் ஈர வலயத்திலிருந்து தோன்றுவதால் வருடந்தோறும் நீர் பாய்கிறது.

அலுபொல நீர்வீழ்ச்சி

OruvanOruvan

Alupola Waterfalls

சப்ரகமுவ மாகாணத்தில் இரத்தினபுரியிலிருந்து 27 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது அலுபொல நீர்வீழ்ச்சி. இந்த நீர்வீழ்ச்சி வளவை ஆற்றின் கிளையாறான வேவல் ஆற்றில் அமைந்துள்ளது. அருகிலுள்ள தேயிலை தோட்டத்தின் பெயரால் இந்த நீர்வீழ்ச்சி அழைக்கப்படுகிறது.