பைடனின் தேசிய பாதுகாப்பு கல்வி சபையின் ஆலோசகராக இலங்கையர் நியமனம்: வெள்ளை மாளிகை தகவல்

OruvanOruvan

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அரசாங்கத்தின் தேசிய பாதுகாப்புக் கல்வி சபையின் ஆலோசகராக இலங்கை வம்சாவளியான கலாநிதி பெட்ரிக் மெண்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலாநிதி பெட்ரிக் மெண்டிஸின் விரிவான அரசாங்க சேவை மற்றும் கல்விசார் சாதனைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

14 உறுப்பினர்களைக் கொண்ட தேசிய பாதுகாப்புக் கல்வி சபையானது எட்டு அமைச்சரவை செயலாளர்கள் மற்றும் ஆறு புகழ்பெற்ற அமெரிக்க குடிமக்களைக் கொண்டுள்ளது.

இந்த சபைக்கு அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் தலைமை தாங்குகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதியின் நியமனம் கலாநிதி மெண்டிஸின் தொழில் வாழ்க்கைக்கு, வெளிவிவகாரக் கொள்கை, சர்வதேச உறவுகள் மற்றும் உலகெங்கிலும் உள்ள உயர்கல்வி ஆகியவற்றில் அவர் ஏற்படுத்திய தாக்கத்திற்கு சான்றாக அமைந்துள்ளதென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையில் உள்நாட்டு போர் இடம்பெற்ற காலப்பகுதியில் கலாநிதி பெட்ரிக் மெண்டிஸ் அமெரிக்காவின் மினசோட்டா மாநிலத்திற்கு குடிப்பெயர்ந்தார்.

மினசோட்டாவில் இருந்த காலப்பகுதியில் ஹென்னெபின் கவுண்டி அரசாங்கம், மினசோட்டா நிதித் துறை மற்றும் மினசோட்டா பிரதிநிதிகள் சபை ஆகியவற்றில் கலாநிதி மெண்டிஸ் பணியாற்றினார்.

மாநிலத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரித்து, கலாநிதி பெட்ரிக் மெண்டிஸூக்கு மினசோட்டாவின் "கௌரவ குடிமகன்" என்ற பட்டத்தை ஆளுநர் ரூடி பெர்பிச் வழங்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.