ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் விரைவில் இலங்கைக்கு அனுப்பப்படுவார்கள்: சென்னை உயர் நீதிமன்றில் அறிவிப்பு

OruvanOruvan

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட குற்றவாளிகளான முருகன், ஜெயக்குமார் மற்றும் ரொபர்ட் பயஸ் ஆகியோருக்கு இலங்கை உயர் ஸ்தானிகராலயம் கடவுச்சீட்டு வழங்கியுள்ளது.

தமிழக அரசு செவ்வாய்க்கிழமை சென்னை உயர்நீதிமன்றத்தில் குறித்த விடயத்தினை அறிவித்துள்ளது.

முருகன் என்ற ஸ்ரீஹரன், தனது மகள் வசிக்கும் பிரித்தானியா செல்ல விசாவிற்கு விண்ணப்பிக்க புகைப்பட அடையாள அட்டையை வழங்குமாறு அரசுக்கு உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தை அணுகினார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஷ் குமார், குமரேஷ் பாபு ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டமது.

விடுதலை செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு இலங்கை உயர்ஸ்தானிகராலயம் கடவுச்சீட்டை வழங்கியுள்ளது என அரசாங்க சட்டத்தரணி (ஏபிபி) ஆர்.முனியப்ப ராஜ் மன்றில் தெரிவித்தார்.

அவர்களை இலங்கைக்கு நாடு கடத்த அனுமதி வழங்குமாறு மாநில அரசு ஏற்கனவே மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும், மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் அவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.

சமர்ப்பிப்புக்குப் பிறகு, மனுதாரருக்கு கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளதை கருத்திற்கு கொண்டு பிரித்தானியா செல்ல அவருக்கு அடையாள அட்டை தேவையில்லை என்று கூறி மனுவை நீதிமன்றம தள்ளுபடி செய்தது.

முருகன் இலங்கை நாட்டவர் என்பதால் சிறையில் இருந்து விடுதலையான பிறகு திருச்சி சிறப்பு முகாமில் (வெளிநாட்டினர் தடுப்பு முகாம்) தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

எனவே, விசா பெற அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க முடியவில்லை என்றும், இது தொடர்பாக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் முருகன் கூறினார்.

புகைப்பட அடையாள அட்டை கோரி மனு அளித்தும் மறுவாழ்வு இயக்குனர் பதில் அளிக்கவில்லை என முருகன் தெரிவித்துள்ளார்.

முருகனின் மகள் ஹரித்ரா பிரித்தானிய குடியுரிமை பெற்றவர் என்றும், முருகன் பிரித்தானியாவில் வாழ்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, தனது மகளுடன் வாழ பிரித்தானியா செல்ல அடையாள அட்டை வழங்குமாறு முருகன் உயர்நீதிமன்றத்தை நாடியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.