சுவிஸில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட தமிழ் குடும்பம்: ஐரோப்பிய நாடுகளில் புகலிடம் கோருவோருக்கு நெருக்கடி

OruvanOruvan

ஐரோப்பிய நாடுகளில் புகலிட கோரிக்கையாளர்களின் நெருக்கடி அதிகரித்துள்ள பின்னணியில் சுவிட்ஸர்லாந்தில் புகலிட கோரிக்கை நிராகரிக்கப்பட்ட தமிழ் குடும்பம் ஒன்று நாடுகடத்தப்பட்டுள்ளது.

சுவிட்ஸர்லாந்து நாட்டின் குடிவரவு, குடியகல்வு சட்டத்திற்கு அமைவாகவே இந்த குடும்பத்தினர் நாடு கடத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தந்தை, தாய் மற்றும் இரு பிள்ளைகள் இவ்வாறு நடுகடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு இந்த தம்பதினிர் சுவிட்ஸர்லாந்து சென்றிருந்த நிலையில், அங்கு புகலிட கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில், இந்த தம்பதியினருக்கு அங்கு இரு குழந்தைகள் பிறந்துள்ளன. தற்போது ஏழு மற்றும் மூன்று வயதாகும் குழந்தைகளுடன் இந்த குடும்பத்தினர் நாடு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, பிரித்தானியா, பிரான்ஸ், சுவிட்ஸர்லாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலும் கனடா, அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் புகலிட கோரிக்கையாளர்களின் நெருக்கடி தீவிரமடைந்துள்ளது.

புகலிட கோரிக்கையாளர்களின் வருகையை கட்டுப்படுத்த இந்த நாடுகளில் கடுமையான விசா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், பலரின் புகலிட கோரிக்கைகளை நிராகரிக்கப்பட்ட நிலையில், நாடு கடத்தப்படுவதும் அதிகரித்துள்ளன.

குறிப்பாக மேற்கூறிய நாடுகளில் இலங்கையில் இருந்துச் சென்ற அதிகளவான தமிழர்கள் புகலிம் கோரியிருந்த நிலையில், கடந்த காலங்களில் பலர் நாடுகடத்தப்பட்ட சம்பவங்களும் பதிவாகியிருந்தன.

இந்நிலையிலேயே, தற்போது சுவிட்ஸர்லாந்தில் இருந்து தமிழ் குடும்பம் ஒன்று நாடு கடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.