கனடாவில் ஆறு இலங்கையர்கள் கொடூரமாக கொலை: தவறான தகவல்களை வழங்கிய பொலிஸார், கேள்விக்குள்ளாகும் நம்பகத்தன்மை

OruvanOruvan

A mother, 4 kids and friend killed at Ottawa home

கனடாவில் அண்மையில் ஆறு இலங்கையர்கள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சில தவறான தகவல்கள் வழங்கப்பட்டதாக பொலிஸார் ஒப்புக்கொண்டுள்ளனர்.

ஒட்டாவா புறநகர் பார்ஹேவனில் உள்ள வீடு ஒன்றில் இருந்து கடந்த ஆறாம் திகதி நான்கு குழந்தைகள் உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் சடலமான மீட்கப்பட்டிருந்தனர்.

குடும்பத் தலைவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்ட குடும்பத்தினருடன் தங்கியிருந்த இலங்கையைச் சேர்ந்த 19 வயதான இளைஞர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு எதிராக ஆறு முதல் தர கொலைக் குற்றச்சாட்டு மற்றும் கொலை முயற்சி ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

சந்தேகநபரின் பெயரில் பிழை

இந்த சம்பவம் இடம்பெற்ற மறு நாள் “துப்பாக்கிச் சூடு” நடத்தி கொலை செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டிருந்தனர்.

அத்துடன், சந்தேகநபரின் பெயரையும் தவறாக எழுதியதாக பொலிஸார் ஒப்புக்கொண்டுள்ளனர்.

சம்பவம் இடம்பெற்ற மறுநாள் செய்தியாளர்களிடம் பேசிய ஒட்டாவா பொலிஸ் தலைவர் எரிக் ஸ்டப்ஸ் இந்த கொலைகளை "வெகுஜன துப்பாக்கிச் சூடு" என்று தவறாக குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன், சந்தேகநபரின் பெயரை பிராங் டி செய்சா என்றும் தவறாக கூறியிருந்தார். எனினும், பின்னர் சந்தேக நபரின் பெயர் பெப்ரியோ டி செய்சா என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்டவர்களின் பெயர் மற்றும் வயது உள்ளிட்ட தகவல்களை பல திருத்தங்களின் பின்னரே பொலிஸார் சரியாக வெளியிட்டனர்.

இந்நிலையில், குறித்த படுகொலை சம்பவத்தின் போது தவறான தகவல்கள் வெளியிடப்பட்டதை பொலிஸார் ஒப்புக்கொண்டுள்ளனர்.

சிக்கல் நிறைந்த தகவல் தொடர்பு

கொலைகள் வழக்கில், "பெயர்களை இணைப்பதில் பல நம்பகமான தகவல் தெரிந்தவர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டது. மேலும் எங்களுக்கு கிடைத்த சில தகவல்கள் தவறானவை" என்று ஒட்டாவா பொலிஸ் தலைவர் எரிக் ஸ்டப்ஸ் கூறியுள்ளார்.

இந்நிலையில், மனிடோபாவில் உள்ள பிராண்டன் பல்கலைக்கழகத்தின் குற்றவியல் பேராசிரியரான கிறிஸ்டோபர் ஷ்னீடர், ஒட்டாவா பொலிஸாரின் தகவல்தொடர்புகள் இந்த வழக்கில் "நம்பமுடியாத அளவிற்கு சிக்கல் நிறைந்துள்ளதாக" குறிப்பிட்டுள்ளார்.

"பெரும்பாலும் ஒருவரின் திறன் அவர்களின் தகவல்தொடர்பு செயல்திறன் மூலம் தீர்மானிக்கப்படுகிறது," என்று ஷ்னீடர் கூறியுள்ளார்.

"பொலிஸ் பாரம்பரிய ஊடகங்கள், சமூக ஊடகங்கள், சமூகத்துடன் திறம்பட தொடர்பு கொள்ளவில்லை என்றால், அது பொலிஸாரின் திறமையின்மை பற்றிய பொதுக் கருத்துக்கு வழிவகுக்கிறது" என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் மூலம் "பொலிஸார் மீதான பொது மக்களின் நம்பிக்கை” கேள்விக்குள்ளாகியுள்ளதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.