பிரான்ஸில் ரயில் பாலம் அமைக்கும் போது ஏற்பட்ட விபத்து: தமிழர் ஒருவர் பரிதாபமாக பலி, கட்டுமான பணிகள் நிறுத்தம்

OruvanOruvan

பிரான்ஸில் துலூஸைக் கடக்கும் மெட்ரோ ரயில் பாதைக்கான பாலம் அமைக்கும் பணியின் போது ஏற்பட்ட விபத்தில் தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுமானப் பணியின் போது மேல்தளத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததாகவும், இதில் தொழிலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

55 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரே உயிரிழந்துள்ளதாக பாரிஸ் தமிழர் வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. உயிரிழந்தவர் பாரிஸின் புற நகராகிய பொண்டியில் வசித்து வந்ததாகவும் கூறப்படுகின்றது.

எட்டுப் பேர் கொண்ட குழுவினர் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்ததாகவும், விபத்தின் போது மூவர் காயமடைந்துள்ளதுடன், ஒருவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

விபத்தை அடுத்து அவசர சேவைகள் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டதுடன், மீட்பு பணிகளும் விரைவாக முன்னெடுக்கப்பட்டதாக என்று Bouygues Travaux பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.

காயமடைந்தவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

விபத்தை தொடர்ந்து மெட்ரோ கட்டுமான பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. பணிகள் மீண்டும் ஆரம்பிக்கும் திகதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.