பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களுக்கு எதிராக திரும்பும் இலங்கை: சுதந்திர தின ஆர்ப்பாட்டத்தின் எதிரொலி

OruvanOruvan

Diaspora people protest in UK

இலங்கையின் 76வது சுதந்திர தின நாளில் லண்டனில் தமிழர்கள் நடத்திய போராட்டத்திற்கு எதிராக தமது அரசாங்கம் பிரித்தானிய அரசாங்கத்திடம் முறையிடவுள்ளதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் அதிருப்தியை லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாக ஐக்கிய இராச்சியத்திற்கு தெரிவிக்கவுள்ளதாக அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இலங்கையிலும் ஏனைய நாடுகளிலும் தடைசெய்யப்பட்ட அமைப்பொன்றுக்கு ஆதரவாக லண்டனில் போராட்டம் நடத்துவதை இலங்கை அரசாங்கம் பிரித்தானியாவிலுள்ள வெளிவிவகார அமைச்சின் கவனத்திற்குக் கொண்டுவரவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இந்த ஆண்டு பெப்ரவரி நான்காம் திகதி இலங்கையின் சுதந்திர தினத்தை தமிழ் தேசத்தின் 'கறுப்பு நாளாக' குறிப்பிட்டு 1000க்கும் மேற்பட்ட தமிழர்கள் மத்திய லண்டனில் பேரணி நடத்தினர்.

மத்திய லண்டனில் உள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகராலயத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இதன்போது உயர் ஸ்தானிகராலயத்திற்கு வெளியே தமிழீழ தேசியக் கொடியை ஏந்தி தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

'தமிழீழம் ஒன்றே தீர்வு', 'போர்க்குற்றங்கள் மட்டுமல்ல, இது திட்டமிட்ட இனப்படுகொலை' என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பேரணி உயர் ஸ்தானிகராலயத்திலிருந்து புறப்பட்டு, ஹைட் பார்க் பிளேஸ், மார்பிள் ஆர்ச், டிராஃபல்கர் சதுக்கம் வழியாக பாராளுமன்ற சதுக்கத்தை நோக்கிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.