பிரித்தானிய பிரதமருக்கு புலம்பெயர் தமிழர்கள் மனு: தன்னாட்சி உரிமையை வலியுறுத்தி பேரணி
ஈழத் தமிழர்களின் அரசியல் உரிமைகள் மற்றும் இன அழிப்புக்கான சர்வதேச நீதி கிடைக்கும் வரை இலங்கை ஒற்றையாட்சி அரசின் சுதந்திரதினம் கரிநாள் என அறிவித்து பிரித்தானியாவில் புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுப்பட்டனர்.
பிரித்தானிய மன்னரின் மாளிகைக்கு முன்பாக பேரணியாக சென்ற மக்கள் ஒன்று கூடினர்.
ஆர்ப்பாட்டக்காரர்களினால் பிரித்தானிய பிரதமருக்கும்,வெளிவிவகார அமைச்சுக்கும், மன்னருக்கும் மனு ஒன்றை கையளித்தனர்.
வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் தன்னாட்சி உரிமையை வலியுறுத்த வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தன்னாட்சிக்கான எழுச்சிப் போராட்டத்தின் கொள்கைப் பிரகடனத்தையும் அரசியல் விருப்பையும் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரித்தானியத் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை, அனைத்துலகத் தமிழ் இளையோர் அமைப்பு உள்ளிட்ட பல தமிழ் பொது அமைப்புகள் இணைந்து மனுவை வழங்கியிருந்தன.
பிரித்தானிய அரசாட்சியில் எடுக்கப்பட்ட தவறான அரசியல் முடிவே தமிழினம் இன்று வரை சந்தித்து வரும் சிங்கள தேசத்தின் இனவழிப்பிற்கு காரணமாக அமைந்து வருகின்றது என்பதையும் வரலாற்று ரீதியாக எடுத்துக்காட்டியமையும் குறிப்பிடத்தக்கது.
தாயகத்தில் கரிநாளன்று எழுச்சிகொண்ட மக்கள் போராட்டங்களை இலங்கை அரசு நசுக்க முற்பட்ட வேளையிலும், தடைகளை தவிர்த்து போராட்டங்கள் நடைபெற்ற சூழலில் பிரித்தானிய மன்னரை நோக்கிய இப்போராட்டமும் முக்கியம் வாய்ந்ததாக பார்க்கப்படுவதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.