AI உருவாக்கிய “திமிறி எழுடா” பாடலுக்கு குடும்பத்தினருக்கு பணம் கொடுத்த ஏ.ஆர் ரஹ்மான்: சர்ச்சை முற்றுப்புள்ளி

OruvanOruvan

AR Rahman

“திமிறி எழுடா” பாடல் சர்ச்சைக்கு இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் தனது சமூகவலைத்தள பக்கத்தில் பதில் கொடுத்துள்ளார்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள லால் சலாம் திரைப்படம் அடுத்த மாதம் 9ம் திகதி திரைக்கானவுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள இந்த படத்தில், விஷ்ணு விஷால், விக்ராந்த், தான்யா பாலகிருஷ்ணன், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கிரிக்கெட்டை பின்னணியாக வைத்து உருவாகியுள்ள லால் சலாம் திரைப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

“திமிறி எழுடா” பாடலை AI தொழில்நுட்பத்தில் மறைந்த பாடகர்கள் சாகுல் ஹமீது, பம்பா பாக்யா ஆகியோரின் குரல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

1990களில் தனது மேஜிக்கல் வாய்ஸ் மூலம் ரசிகர்களை பரவசப்படுத்தியவர் சாகுல் ஹமீது. ஏஆர் ரஹ்மான் - சாகுல் ஹமீது கூட்டணியில் பல சூப்பர் ஹிட் பாடல்கள் வெளியாகியுள்ளன.

AI டெக்னாலஜியை பயன்படுத்தி உயிருடன் இல்லாத இரண்டு பாடகர்களையும் பாட வைத்தது இதுவே முதன்முறை என சொல்லப்படுகிறது. இது சர்ச்சையானதை தொடர்ந்து, ஏஆர் ரஹ்மான் விளக்கம் கொடுத்துள்ளார்.

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், "லால் சலாம் படத்தில் 'திமிறி எழுடா' என்ற பாடலுக்காக AI மூலம் மறைந்த பாடகர்கள் சாகுல் ஹமீது, பம்பா பாக்யா ஆகியோரின் குரல்கள் பயன்படுத்தப்பட்டன.

இதற்காக அவர்களது குடும்பத்தினரிடம் உரிய அனுமதி பெற்று அதற்கு சம்பளமும் வழங்கப்பட்டுள்ளது.

முறையாக பயன்படுத்தினால் தொழில்நுட்பம் ஒருபோதும் அச்சுறுத்தலாகவோ தொல்லையாகவோ இருக்காது" என ஏஆர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

ஏ.ஐ தொழிநுட்பம் கடந்த சில மாதங்களாக சினிமாவில் பல்வேறு புயலை ஏற்படுத்தியிருந்தது. இளம் நடிகைகளின் புகைப்படங்கள் மற்றும் காணொளியை பயன்படுத்தி டீப் ஃபேக்ஸ் செய்யப்பட்டு அதிர்வலைகளை ஏற்படுத்தி வந்தது.

டீப் ஃபேக்ஸ்

செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்படும் அச்சு அசல் உண்மை போலவே தோற்றமளிக்கும் போலி படங்கள் மற்றும் வீடியோக்களை 'டீப் ஃபேக்ஸ்' என்று அழைக்கப்படும்.

இதன்மூலம் ஒருவரது முகத்தை அவரின் விருப்பம் இல்லாமலேயே ஒரு புகைப்படத்திலோ அல்லது டியோவிலோ இருக்கும் இன்னொரு நபரின் முகத்தின் மேல் பொருத்த முடியும்.

மற்றும் பல விஷயங்களும் செய்ய முடியும்.

இப்படி உருவாக்கப்படும் படங்கள் மற்றும் வீடியோக்களால் நடக்கக்கூடிய குற்றங்கள் எண்ணில் அடங்காதவை.

மனிதர்களால் உருவாக்கப்படும் மார்ஃபிங் படங்களிலேயே இன்று பல பிரச்சினைகள் வெடித்து தற்கொலைகள் கூட நடந்திருக்கின்றன.

இன்று செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் போலி படங்கள் மட்டுமன்றி போலி வீடியோக்கள் உருவாக்குவதும் மிக எளிதாக மாறியிக்கிறது.

இப்படி ஏ.ஐ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சூழலில் இசைப்புயல் மறைந்த பாடகர்களுக்கு உயிர் கொடுத்து புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.

முறையாக பயன்படுத்தினால் தொழில்நுட்பம் ஒருபோதும் அச்சுறுத்தலாகவோ தொல்லையாகவோ இருக்காது என்ற ஏஆர் ரஹ்மானின் நம்பிக்கை சினிமா உலகில் மேலும் பல மாற்றங்களை நிகழ்த்துமா என்று பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.