தாயின் கல்லறை அருகே பவதாரிணியின் உடல் அடக்கம்: பாடல் பாடி மரியாதை செய்த குடும்பத்தினர், சோகத்தில் மூழ்கியது தேனி

OruvanOruvan

மறைந்த பின்னணி பாடகி பவதாரிணியின் உடல் தேனி - பண்ணையபுரத்தில் உள்ள அவரது தாயார் ஜீவா மற்றும் பாட்டியின் நினைவிடம் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பவதாரிணி நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் இலங்கையில் உள்ள பிரபல தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் உயிரிழந்தார்.

இதனையடுத்து இலங்கைக்கு வந்த பவதாரிணியின் தந்தை இளையராஜா மற்றும் சகோதரர் யுவன் சங்கர்ராஜா உள்ளிட்டவர்கள் உரிய நடைமுறைகளின் பின்னர் உடலை சென்னைக்கு நேற்று மதியம் விமானம் மூலம் எடுத்துச் சென்றனர்.

சென்னை - தி நகரில் உள்ள இளையராஜாவின் வீட்டில் சடலம் பொது மக்கள் மற்றும் திரையுலகினரின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று இரவு 10 மணிக்கு உடல் தேனி, பண்ணையபுரத்திற்கு எடுத்து வரப்பட்டது.

பண்ணையபுரம், லோயர்கேம்ப் அருகே உள்ள இளையராஜாவின் குருகிருபா வேத பாடசாலை ஆசிரமத்தில் இறுதி அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டது.

அவரது உடலுக்கு ஊர் மக்கள், உறவினர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்திய நிலையில், தொடர்ந்து அவரது இறுதி சடங்குகள் நடைபெற்றன. திருவாசகம் பாடப்பட்டு பவதாரிணியின் உடலுக்கு இறுதி சடங்குகள் நடைபெற்றன.

இறுதி சடங்கில் பவதாரிணி பாடி, தேசிய விருது பெற்ற "மயில் போல பொண்னு ஒண்ணு" பாடலை அவரது குடும்பத்தினர் பாடினர்.

இறுதிச்சடங்கு செய்யப்பட்டு முடிந்ததுமே, கார்த்திக் ராஜா, வெங்கட்பிரபு உள்ளிட்டோர் பவதாரணியின் உடலை சுமந்து வந்ததுடன், உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தேனியின் லோயர் கேம்ப்பில் உள்ள இளையராஜாவின் வீட்டில், அவரின் அம்மா சின்னதாய், மனைவி ஜீவா ஆகியோரின் மணிமண்டபம் அமைந்துள்ளது.

இந்த இடத்திலேயே பவதாரிணியின் உடலும் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.