தேனிக்கு கொண்டுச் செல்லப்படும் பவதாரிணியின் உடல்: நாளை இறுதிக் கிரியை, இளையராஜாவின் டுவிட் பதிவு

OruvanOruvan

பிரபல இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணியின் இறுதிக் கிரியைகள் நாளை 27ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக குடும்பத்தினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில், இன்றிரவு 10 மணியளவில் அவரின் உடல் சொந்த ஊரான தேனிக்கு கொண்டுச் செல்லப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பவதாரிணி சிகிச்சை பலனின்றி நேற்று மாலை ஐந்து மணிக்கு கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் உயிரிழந்தார்.

உயிரிழக்கும் போது அவருக்கு வயது 47 ஆகும். மூன்று பிள்ளைகளை கொண்ட குடும்பத்தில் பவதாரிணி இரண்டாவது பிள்ளையாவார்.

OruvanOruvan

இந்நிலையில், இளையராஜா, யுவன் சங்கர் ராஜா உள்ளிட்டவர்கள் கொழும்பு வந்திருந்த நிலையில், இன்று மதியம் விமானம் மூலம் உடல் சென்னைக்கு கொண்டுச் செல்லப்பட்டது.

அங்கு திரையுலகத்தினரின் மற்றும் பொது மக்களின் அஞ்சலிக்காக தி. நகரில் உள்ள இளையராஜாவின் வீட்டில் பவதாரிணியின் உடல் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்றிரவு 10 மணியளவில் சொந்த ஊரான தேனி - பன்னைபுரத்திற்கு உடல் எடுத்துசெல்லப்படவுள்ளதாக குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

அங்கு பொது மக்களின் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டு மாலை இறுதிக் கிரியைகள் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தனது மகளின் மறைவையடுத்து இசைஞானி இளையராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் பவதாரிணி குழந்தைப் பருவத்தில் தன்னுடன் இருக்கும் புகைப்படத்தை “அன்பு மகளே” என்ற வசனத்துடன் பதிவிட்டுள்ளார்.

பவதாரிணி பற்றி

‘இராசையா’ படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமானவர் பவதாரிணி. அப்போதிருந்து, அவர் தனது தந்தை இளையராஜா மற்றும் சகோதரர்களான கார்த்திக் ராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகியோருக்காக பல பாடல்களைப் பாடினார்.

அவர் இசையமைப்பாளர்களான தேவா மற்றும் சிற்பி ஆகியோருக்காகவும் பாடல்களை பாடியுள்ளார்.

2002ஆம் ஆண்டு, ரேவதி இயக்கிய 'மித்ர் மை ஃப்ரெண்ட்' படம் மூலம் இசையமைப்பாளராக மாறினார்.

பின்னர் 'ஃபிர் மிலேங்கே' உள்ளிட்ட சில படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

இறுதியான மலையாளப் படமான 'மாயநதி' என்ற படத்திற்கு இசைய அமைத்திருந்தார்.

மேலும்,'காதலுக்கு மரியாதை', 'பாரதி', 'அழகி', 'நண்பர்கள்', 'பா', 'மங்காத்தா' மற்றும் 'அநேகன்' போன்ற தமிழ்த் திரைப்படங்களில் பாடல்களைப் பாடியுள்ளார்.