எடிசன் திரை விருது பட்டியலில் அதிக பிரிவுகளை ஆக்கிரமித்த ஜெயிலர், லியோ: ஒரு வாரத்தில் 10 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் வாக்களிப்பு

OruvanOruvan

Jailer and Leo

2023 ஆம் ஆண்டு வெளியீடு கண்ட நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களுக்கான எடிசன் திரை விருதுகளுக்கான தேர்வு பட்டியல் கடந்த வாரம் வெளியிடப்பட்டது.

பல்வேறு நாடுகளில் உள்ள தமிழர்கள் www.edisonawards.in இணையதளம் மூலம் தங்களுக்கு பிடித்தமான திரை கலைஞர்களுக்கு இணையவாக்கு மூலம் வாக்களித்து வருகின்றனர்.

தேர்வு பட்டியலின் பல்வேறு பிரிவுகளில் அதிகபடியாக இடம் பிடித்திருக்கும் திரைப்படங்களில் ரஜினிகாந்த் நடித்த ஜெய்லர் மற்றும் விஜய் நடித்த லியோ ஆகிய திரைப்படங்கள் இடம் பிடித்துள்ளன.

கடந்த ஆண்டு இணையம் மற்றும் சமூக வலைதளங்களில் மூலம் 40 மில்லியன் பார்வையாளர்களை கொண்டு ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் வாக்களித்திருந்தனர்.

அதேபோன்று இந்த ஆண்டும் தேர்வு பட்டியல் வெளியிட்ட ஒரு வாரத்தில் 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாக்களித்துள்ளனர். இதன்படி, வாக்களிப்பு கடந்த ஆண்டைவிட அதிகமாகும் என சமூக வலைதள நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக விஜய் இரசிகர்களும், ரஜினி இரசிகர்களும் அதிகப்படியான வாக்குகளை செலுத்தி வருவதனை அவதானிக்க முடிகிறது.

இந்த நிலையில், எடிசன் விருதுக்கான விளம்பர யுக்திகளை ஆரம்பிப்பதற்கு முன்பே 10 இலட்சம் பேர் வாக்களித்து இருப்பது பெருமைக்குரியதாகும் என எடிசன் விருது குழு தலைவர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.

அத்துடன், எதிர்வரும் பெப்ரவரி மாதம் 1ஆம் திகதி முதல் பல்வேறு நாடுகளில் உள்ள தினசரி நாளிதழ்கள், வானொலிகள், தொலைக்காட்சிகள், இணையதளங்கள், சமூக வலைதளங்கள் மூலம் விளம்பரம் செய்ய உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.