"ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே…" சித்ராவின் அடையாளமாக மாறிய 'சின்னக்குயில்': 'மின்சார கனவு', 'ஆட்டோகிராப்' படங்களுக்கும் தேசிய விருது பெற்று இந்தியாவில் அதிக முறை தேசிய விருதை வென்ற பாடகி என்ற பெருமைக்கு சித்ரா சொந்தக்காரரானார்.

OruvanOruvan

Chinna Kuyil Chitra

பாடகி சின்னக்குயில் சித்ராவின் பிறந்தநாள் இன்று.

சின்னக்குயில், மெலோடி குயின், நைட்டிங்கேல், வானம்பாடி, சங்கீத சரஸ்வதி என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் இவர், இன்று தனது 60வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த பாடகர் கிருஷ்ணன் நாயருக்கும், சாந்தகுமாரிக்கும் மகளாக 1963ம் ஆண்டு ஜூலை 27ந் திகதி சித்ரா பிறந்தார்.

இவர் முதன் முதலாக தன்னுடைய 5வது வயதில் அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பிய சங்கீத ரூபகத்தில் சில வரிகள் பாடினார்.

OruvanOruvan

Chinna Kuyil Chitra

பாடகி சித்ரா முறைப்படி கர்நாடக சங்கீதம் கற்றுக்கொண்டவர். படிப்பில் முதுகலை பட்டங்களை பெற்ற அவர், 1978 முதல் 1984 ஆண்டு வரை தேசிய அளவில் பல்வேறு துறைகளில் திறமையானவர்களுக்கு மத்திய அரசு வழங்கிய கல்வி உதவித் தொகையை பெற்றவர்.

பிரபல மலையாள இசையமைப்பாளர் எம்.ஜி.ராதா கிருஷ்ணன் தனது படங்களிலும், தனி இசைப் பாடல்களிலும் சித்ராவின் குரல் வளத்தை பயன்படுத்த தொடங்கினார்.

அங்கு தான் அவரின் இசை பயணமும் ஆரம்பித்தது.

கடந்த 1980ம் ஆண்டு சித்ரா பாடிய மலையாள பட பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றன.

OruvanOruvan

Chinna Kuyil Chitra

மலையாளத்தில் பாசில் இயக்கிய படம் தமிழில் 'பூவே பூச்சூடவா' என்ற பெயரில் எடுக்கப்பட்டது. படத்தின் பாடல்களை கேட்ட இசையமைப்பாளர் இளையராஜா, அதில் பாடிய சித்ராவின் குரலால் ஈர்க்கப்பட்டு அவரை தமிழில் அறிமுகம் செய்தார்.

ஆனால் 'நீ தானா அந்தக் குயில்' படத்தில் இடம் பெற்ற 'பூஜைக்கேத்த பூவிது' பாடல் தான் இளையராஜா இசையில் சித்ரா பாடிய முதல் பாடல் ஆகும்.

அதற்குள் 'பூவே பூச்சுடவா' படத்தில் 'சின்னக்குயில் பாடும் பாட்டு கேட்குதா' பாடல் வெளியாகி பட்டி தொட்டியெங்கும் பரவியது. அதில் இடம் பெற்ற 'சின்னக்குயில்' என்ற வார்த்தையே சித்ராவின் அடையாளமாக மாறியது.

1985-ம் ஆண்டில் இளையராஜா இசையில் 'கீதாஞ்சலி' திரைப்படத்தில் சித்ரா பாடிய 'துள்ளி எழுந்தது பாட்டு, சின்னக் குயில் இசை கேட்டு', வைரமுத்துவின் 'ஒரு ஜீவன் அழைத்தது' ஆகிய பாடல்கள் புகழ்பெற்றன.

ஜானகி, பி.சுசீலா ஆகியோர் வரிசையில் சித்ரா தனக்கென தனியிடம் பிடித்தார்.

அவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, வங்கம், ஒரியா, பஞ்சாபி, குஜராத்தி, துளு, ராஜஸ்தானி, உருது என பல மொழிகளில் கிட்டதட்ட 25 ஆயிரம் பாடல்களை பாடியுள்ளார்.

OruvanOruvan

Chinna Kuyil Chitra

தமிழில் அவர் பாடிய பாடல்கள் அனைத்தும் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டது .

தமிழில் கே.பாலசந்தர் இயக்கிய 'சிந்து பைரவி' படத்தில் இடம் பெற்ற "பாடறியேன் படிப்பறியேன்', 'நானொரு சிந்து' பாடல்களுக்கு சித்ராவுக்கு முதல் தேசிய விருது கிடைத்தது.

'மின்சார கனவு', 'ஆட்டோகிராப்' படங்களுக்கும் தேசிய விருது பெற்று இந்தியாவில் அதிக முறை தேசிய விருதை வென்ற பாடகி என்ற பெருமைக்கு சித்ரா சொந்தக்காரரானார்.

"ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே..." என்ற பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிப்பு தட்டாது.

இதேபோல் மலையாளத்திலும் பல பாடல்கள் அவருக்கு விருதை வாங்கி தந்தன.

அதேசமயம் பிலிம்பேர், மாநில அரசு விருதுகள் என ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார்.

மத்திய அரசின் உயரிய அங்கீகாரங்களில் ஒன்றான பத்மஸ்ரீ விருதையும் பெற்றிருக்கிறார்.

இப்படி எண்ணற்ற மறக்க முடியாத நிகழ்வுகளை கொண்டுள்ள சித்ராவின் பங்களிப்பு, எப்படி குயிலின் குரல் எந்த காலக்கட்டத்திலும் சலிக்காதோ, அதே மாதிரி ரசிகர்களால் மறக்க முடியாது.

இன்று பிறந்தநாளை கொண்டாடும் சின்ன குயில் சித்ராவுக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.