பெப்ரவரியில் வெளிநாட்டு கையிருப்பு 4.5 பில்லியன் டொலர்களாக அதிகரிப்பு: இறக்குமதி தேவை மேலும் உயர்வு
2024 பெப்ரவரி இறுதிக்குள் நாட்டின் உத்தியோகப்பூர்வ வெளிநாட்டு கையிருப்பு 4,517 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது.
ஜனவரியில் குறித்த தொகையானது 4,496 மில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்பட்டதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது.
பெப்ரவரியில் வங்கிகளில் இருந்து வெளிநாட்டு நாணயத்தை குவிப்பதன் மூலம் மத்திய வங்கி கையிருப்புகளை உயர்த்துவதற்கான தனது முயற்சிகளை தொடர்ந்ததால், உத்தியோகபூர்வ வெளிநாட்டு நாணய இருப்புக்கள் அதிகரித்தன.
புலம்பெயர் தொழிலாளர்களின் பணம் அனுப்புதல், சுற்றுலா மற்றும் வலுவான ஏற்றுமதிகள் ஆகியவற்றின் அதிகரிப்பும் இதற்கு உந்து சக்தியாக அமைந்துள்ளன.
வெளிநாட்டு நாணயத்திற்கான தேவை குறைவாக இருக்கும் நேரத்தில் நாட்டின் உத்தியோகப்பூர்வ கையிருப்பு தொகை அதிகரித்துள்ளது.
பொருளாதாரம் கடந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் இருந்து மீண்டு வருவதற்கான பாதையில் பயணித்த போதிலும், இறக்குமதி பொருளாதாரம் இன்னும் முழுமையடையவில்லை.
ஜனவரியில் இறக்குமதிகள் 6.2 சதவிகிதம் அதிகரித்து நுகர்வோர் மற்றும் தொழில்துறை பொருட்கள் இரண்டிலும் 1,512 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்தது.
மேலும் இது ஒரு வருடத்திற்கு முன்பு 445 மில்லியனாக இருந்த வர்த்தகப் பற்றாக்குறையை 541 மில்லியன் அமெரிக்க டொலர்களாக விரிவுபடுத்தியது.
கட்டுமானத் துறை மீட்சிப் பாதையில் இருக்கும் அதே வேளையில் வரவிருக்கும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு இறக்குமதிக்கான தேவை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த வாரம் பாராளுமன்றத்தில் 2027 ஆம் ஆண்டு வரை வெளிநாட்டுக் கடன் வைத்திருப்பவர்களிடம் இருந்து ஐந்து வருட கால அவகாசத்தை பெற எதிர்பார்க்கிறோம் என்று கூறினார்.
இது வெற்றியடைந்தால், நாடு முன்னெப்போதும் கண்டிராத அளவிற்கு இருப்புக்களை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு போதுமானதாக அமையும் என்று கூறியமையும் குறிப்பிடத்தக்கது.