தீவிலுள்ள கனிமங்களை குறி வைக்கும் இந்தியா: உலகிலேயே சிறந்த கிராஃபைட்டை கொண்ட நாடாக இலங்கை

OruvanOruvan

File Photo

இந்திய நிறுவனங்களினால் இலங்கை மற்றும் அவுஸ்திரேலியாவில் உள்ள முக்கியமான கனிமங்களை அகழ்வதற்கான வாய்ப்புகள் குறித்து விவாதிக்க இந்திய சுரங்க அமைச்சு, தொழில்துறை பங்குதாரர்களுடன் ஜனவரி மாதம் இரண்டு சந்திப்புகளை நடத்தியது.

வெளிநாட்டு கனிம சொத்துக்களை கையகப்படுத்துவதன் மூலம் இந்தியாவின் முக்கியமான கனிம விநியோகச் சங்கிலியை வலுப்படுத்த அமைச்சின் பரந்த உந்துதலுக்கு அமைவாக இந்த சந்திப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டதாக 'The Indian Express' செய்தி வெளியிட்டுள்ளது.

இரு நாடுகளுடனும் சந்திப்பு

Ola Electric, Hindalco Industries, மற்றும் Gujarat Mineral Development Corporation போன்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளை, இலங்கையில் கனிமங்களை அகழ்வுக்கான வாய்ப்புகள் குறித்து விவாதிப்பதற்காக இந்திய சுரங்க அமைச்சு கடந்த ஜனவரி 5 ஆம் திகதி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது.

இந்த சந்திப்பின் மூன்று நாட்களுக்குப் பின்னர், அவுஸ்திரேலியாவில் கனிமங்களை அகழ்வதற்கான வழிகளை ஆராய்வதற்காக கூட்டத்தையும் ஏற்பாடு செய்தது இந்திய சுரங்க அமைச்சு.

இதில் அவுஸ்திரேலியாவுக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் Coal India, Steel Authority of India, Vedanta, Tata Steel, Adani Group, மற்றும் JSW Steel ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

இலங்கை கிராஃபைட் மீதான இந்தியாவின் ஆர்வம்

தீவு தேசத்தில் மட்டுமே காணப்படும் இயற்கையான கிராஃபைட்டின் (Graphite) மிகவும் தூய்மையானதாக கூறப்படுகிறது.

கிராஃபைட் என்பது ஒரு முக்கியமான கனிமமாகும், இது லித்தியம்-அயன் பேட்டரிகளில் அனோட் பொருளாக பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

எடையின் அடிப்படையில், கிராஃபைட் பொதுவாக லித்தியம்-அயன் பேட்டரிகளில் மிகப்பெரிய கூறு ஆகும், சராசரி மின்சார வாகனத்தில் (EV) 70 கிலோகிராம் வரை கிராஃபைட் பயன்படுத்தப்படுகிறது.

இலங்கையின் கிராஃபைட் மீதான இந்தியாவின் ஆர்வம், தீவின் கிராஃபைட் சுரங்கத்திற்காக இந்திய நிறுவனங்களை இலங்கை அரசாங்கம் தீவிரமாகப் பின்தொடர்வதோடு ஒத்துப்போகிறது.

தாரக பாலசூரிய

இது குறித்து இந்தியாவுக்கான இலங்கை வெளிவிவகார அமைச்சர் தாரக பாலசூரிய ஏ.என்.ஐ செய்திச் சேவைக்கு பெப்ரவரி 22 அளித்த செவ்வியொன்றில்,

“உலகிலேயே சிறந்த கிராஃபைட் எங்களிடம் உள்ளது. இப்போது இந்திய நிறுவனங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களைத் தயாரிக்கும்.

மின்சார மின்கலங்களுக்கான பெரிய கூறுகளில் ஒன்று கிராஃபைட் ஆகும்.

எங்களிடம் சுமார் 30,000 கிராஃபைட் சுரங்கங்கள் உள்ளன.

எனவே இந்த இந்திய நிறுவனங்கள் கொண்டிருக்கும் நிபுணத்துவம் மற்றும் தொழில்நுட்பத்துடன் அகழ்வுக்காக நிறைய வாய்ப்புகள் உள்ளன, அவர்கள் இலங்கையை தீவிரமாக அவதானிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன் - என்றார்.

OruvanOruvan

Tharaka Balasuriya

இலங்கையின் கிராஃபைட் ஏற்றுமதி

20 ஆம் நூற்றாண்டில் நடந்த இரண்டு உலகப் போர்களின் போது இலங்கையில் கிராஃபைட் அகழ்வு உச்சத்தை அடைந்தது, இதன்போது ஆண்டு ஏற்றுமதி 30,000 தொன்களுக்கும் அதிகமாக இருந்தது.

எனினும், 2023 ஆம் ஆண்டில், நாடு சுமார் 2,500 தொன் எடையுள்ள மற்றும் சுமார் 6 மில்லியன் டொலர் பெறுமதியான கிராஃபைட்டை மட்டுமே ஏற்றுமதி செய்தது.

அமெரிக்க புவியியல் ஆய்வுத் துறையின் தரவுகளின்படி, இலங்கையில் சுமார் 1.3 மில்லியன் தொன்கள் கிராஃபைட் இருப்பு உள்ளது.

இந்தியாவில் அருணாச்சலப் பிரதேசம், ஜம்மு - காஷ்மீர் மற்றும் ஜார்கண்ட் ஆகிய இடங்களில் அதிக அளவில் கிராஃபைட் குவிந்துள்ளன.

இந்த மூன்று மாநிலங்களும் மொத்தமாக இந்தியாவின் கிராஃபைட் வளங்களில் 74 சதவீதத்தைக் கொண்டுள்ளன.

OruvanOruvan

KAHATAGAHA GRAPHITE LANKA

பொருளாதார நெருக்கடி, கடன் சுமைகள் என்பவற்றை காரணம் காட்டி தொடர்ச்சியாக இந்தியா, சீனா மற்றும் அமெரிக்கா உட்பட ஏனைய நாடுகள் இலங்கையில் தனது ஆதிக்கத்தை செலுத்துவதை காணக்கூடியதாக உள்ளது.

ஏற்கனவே, ஹம்பாந்தோட்டை, திருகோணமலை போன்ற இலங்கையின் பகுதிகளில் சீனா, இந்தியா போன்ற நாடுகளின் பிடியில் உள்ளது.

இந் நிலையில், இலங்கையின் இயலாமையினை பயன்படுத்தி தற்சமயம் தீவிலுள்ள முக்கிய கனிம வளங்களையும் சூறையாடும் வியூகத்தை இந்தியா ஆரம்பித்துள்ளது.