தாமதமான காற்றாலை ஆற்றல் திட்டங்கள் அடுத்த மாதத்திற்குள் முன்னேற்றம் அடையும்: ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவையிடம் அமைச்சர் கஞ்சன தெரிவிப்பு

OruvanOruvan

இந்தியாவின் அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் (Adani Green Energy Ltd – AGEL) மூலம் நிர்மாணிக்கப்படும் தாமதமான இரு காற்றாலை ஆற்றல் திட்டங்களில் அடுத்த மாதத்திற்குள் முன்னேற்றம் அடையும் என்று இலங்கை நம்பிக்கை கொண்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் புதன்கிழமை தெரிவித்தார்.

பணப் பற்றாக்குறை மற்றும் எரிபொருள் நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள தெற்காசிய தீவு தேசம், இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருள் செலவினங்களின் அதிகரிப்புக்கு எதிராக பசுமை மின் உற்பத்தியை விரைவுபடுத்த முயற்சிக்கிறது.

எனினும், திட்டத்திற்கான விலை நிர்ணயம் மற்றும் ஆலை செயல்திறன் ஆகியவற்றில் உள்ள சர்ச்சைகள் காரணமாக காற்றாலை திட்டங்கள் இன்னும் மதிப்பீடு செய்யப்படுகின்றன.

கோவாவில் நடைபெற்ற இந்திய எரிசக்தி வார நிகழ்வில் கலந்துகொண்ட மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவைக்கு இது குறித்து அளித்த செவ்வியில்,

ஒருவேளை அடுத்த நான்கு வாரங்களில், பேச்சுவார்த்தை செயல்முறையில் சில முடிவுகளைக் காண்போம். மேலும் பரிமாற்ற பாதைகளுக்கான மற்றொரு பேச்சுவார்த்தையும் மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது.

எனவே மார்ச் மாதத்திற்குள் இது தொடர்பான திட்டங்கள் முன்னேற்றம் அடையும் என்று நம்புவதாக கூறினார்.

2023 பெப்ரவரியில் காற்றாலை திட்டங்களில் 442 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு செய்வதற்கான அனுமதிகளை பெற்ற அதானி நிறுவனம் இந்த கருத்துக்கான கோரிக்கைக்கு உடனடியாக பதிலளிக்கவில்லை என்று ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது.

நீர் மின்சாரம், நிலக்கரியில் இயங்கும் ஆலைகள் மற்றும் எரிபொருள் அடிப்படையிலான மின் உற்பத்தி நிலையங்கள் ஒவ்வொன்றும் இலங்கையின் மின்சார உற்பத்தியில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கைக் கொண்டுள்ளன.

புதிய நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தி திறனை அதிகரிக்காமல் இருப்பதற்கு அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது மற்றும் 2030 ஆம் ஆண்டளவில் அதன் 70% மின்சாரத்தை புதுப்பிக்கத்தக்க மூலங்களிலிருந்து உற்பத்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

அண்டை நாடான இந்தியா அண்மையில் இலங்கைக்கு இரண்டு ஆலைகளில் மின்சாரம் உற்பத்தி செய்ய திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை (LNG) வழங்க முன்மொழிந்தது.

நவம்பர் மாதம், அம்பாந்தோட்டையில் 4.5 பில்லியன் டொலர் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நிர்மாணிப்பதற்கான சீனாவின் சினோபெக்கின் முன்மொழிவுக்கு இலங்கை ஒப்புதல் அளித்தது, அங்கு சீனா ஒரு துறைமுகத்தை நிர்மாணித்தது.

இது குறித்து அமைச்சர், ஒப்பந்தத்தின் படி நில அனுமதி, நீர் இருப்பு, வரி மற்றும் சலுகைகள் குறித்து சினோபெக் கோரிய விளக்கங்களை அரசாங்கம் வழங்கியுள்ளதாகவும் விஜேசேகர கூறினார்.