அடுத்த மாதம் இலங்கை வரும் தாய்லாந்து பிரதமர்: சுதந்திர வர்த்தக ஒப்பந்தமும் கைச்சாத்து

OruvanOruvan

Srettha Thavisin

தாய்லாந்தின் பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் (Srettha Thavisin) அடுத்த மாதம் இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

விஜயத்தின் நோக்கம்

இந்த விஜயத்தின் போது அவர் இலங்கையுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் (FTA) உத்தியோகபூர்வமாக கைச்சாத்திடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக பெப்ரவரி 3 ஆம் திகதி அவர் இலங்கைக்கு வருவார்.

அதேநேரம் ஸ்ரேத்தா தவிசின், காலி முகத்திடலில் பெப்ரவரி 4 ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கையின் 76 ஆவது சுதந்திர தின நிகழ்வுகளில் விசேட அதிதியாக கலந்து கொள்ளவும் உள்ளார்.

பின்னணி

2023 டிசம்பர் 18-20 வரை தாய்லாந்துடன் இலங்கை நடத்திய ஒன்பதாவது சுற்று சுதந்திர வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடிவடைந்ததைத் தொடர்ந்து ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.

கொவிட்-19 தொற்றுநோய் மற்றும் இலங்கையின் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் தொடர்ச்சியான மறுசீரமைப்பு ஆகியவற்றின் விளைவாக, நான்கு ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு நாடுகளுக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் 2023 நவம்பரில் மீண்டும் தொடங்கப்பட்டன.

2023 இன் முதல் 10 மாதங்களில் தாய்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தக மதிப்பு 320.37 மில்லியன் டொலர்களாக இருந்தது.

தாய்லாந்து 213.49 மில்லியன் டொலர் பெறுமதியான பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளதுடன், இலங்கையில் இருந்து 106.88 மில்லியன் டொலர் பெறுமதியான பொருட்களை இறக்குமதி செய்துள்ளது.

சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FTA)

இருதரப்பு வர்த்தகத்தை 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிக்கும் எதிர்பார்ப்புடன் இலங்கை தாய்லாந்துடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் பெப்ரவரி 3 ஆம் திகதி கைச்சாத்திடவுள்ளது.

இலங்கையில் இருந்து தாய்லாந்திற்கு குறிப்பாக இரத்தினங்கள், நகைகள், தேயிலை மற்றும் விவசாயப் பொருட்கள் ஏற்றுமதியை மேம்படுத்துவதற்கு புதிய ஒப்பந்தம் வழி வகுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.