அணுசக்தி திட்டம்: அமெரிக்காவின் முன்மொழிவை நிராகரித்தது ஈரான்

ஈரான் அனைத்து யுரேனிய செறிவூட்டல்களையும் நிறுத்த வேண்டும் என்ற அமெரிக்காவின் முன்மொழிவை ஈரானிய ஆன்மீகத் தலைவர் ஆயத்துல்லா செய்யத் அலி காமெனெய் நிராகரித்துள்ளார்.
ஈரான் இஸ்லாமிய குடியரசின் நிறுவனர் மறைந்த இமாம் கொமெய்னியின் 36 வது வருட நினைவு நிகழ்வு தெற்கு தெஹ்ரானில் உள்ள இமாம் கொமெய்னியின் கல்லறையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பில் உரையாற்றிய ஆயத்துல்லா காமெய்னி, நமது புரட்சியின் தலைவர் ஒரு சிறந்த மனிதர், அவர் இறந்து பல ஆண்டுகள் கடந்த பின்னரும் உலகில் அவரது இருப்பு இன்னும் உணரத்தக்கது. அவரது புரட்சியின் தாக்கம் உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு தெளிவாகத் தெரியும்.
உலகில் அமெரிக்காவின் நிலையில் ஏற்பட்ட கூர்மையான சரிவுக்கு அவரது இருப்பு முக்கிய காரணமாகும். சியோனிஸ்டுகள் மீதான வெறுப்பு அவரது புரட்சியின் விளைவாகும்.
அமெரிக்காவின் முதல் வார்த்தை என்னவென்றால், ஈரான் அணுசக்தித் தொழிலைக் கொண்டிருக்கக்கூடாது. அமெரிக்காவை நம்பியிருக்க வேண்டும் என்பதாகும்.
அமெரிக்காவின் முட்டாள்தனத்திற்கு எங்கள் பதில் தெளிவானது. இந்த விடயத்தில் அவர்களால் எதுவும் செய்ய முடியாது. ஈரானின் அணுசக்தி விவகாரத்தில் யுரேனியம் செறிவூட்டல் தான் முக்கியம். ஈரானின் அணுசக்தித் துறைக்கான அமெரிக்காவின் திட்டம் நம்மால் முடியும் கோட்பாட்டிற்கு முற்றிலும் எதிரானது. ஈரான் அதன் யுரேனிய செறிவூட்டல் நடவடிக்கைகளைப் பேணிப் பாதுகாக்கும். அது அமெரிக்காவின் வேலை அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.